665.

     வளங்கொ ளும்முல்லை வாயிலின் மேவிய
     குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
     உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
     களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

உரை:

     வளம் பொருந்திய திருமுல்லைவாயிலிற் கோயில் கொண்ட நெற்றியிற் கண்ணையுடைய குருமணியாகிய சிவபெருமானே, உன் திருக்கோயிலில் மாசுற்ற நெஞ்சினனாகிய யான் புறக்கண்ணாற் கண்டதும் உன்னை உள்ளத்தே பொருந்தும்படி அகக்கண்ணாற் கண்டு கொண்டேன். எ.று.

     முல்லை வளம் மிக்க நிலமாதலின், “வளங் கொளும் முல்லைவாயில்” என மொழிகின்றார். குளம் - நெற்றி. பக்குவமுற்ற ஆன்மாக்கட்குக் குரு வடிவில் போந்து ஞானம் அருளும் வள்ளலாதலால் சிவனை, “குரு மணியே” என்று கூறுகின்றார். ஞானிகள் நால்வர்க்கு அறமுரைத்த வரலாற்றைக்கொள்ளலும அமையும். திருக்கோயிலிற் கண்ட திருவுருவம் உள்ளத்தே நன்கு படிந்த திறத்தை “உன் திருக்கோயிலிற் கண்டதும் உளம்கொளும்படி கண்டதாயிற்று” என்று உரைக்கின்றார். நினைக்குந்தோறும் உள்ளத்தில் தோன்றி இன்பம் செய்தல் பற்றி இங்ஙனம் கூறுகின்றார். நெஞ்சின் உள்ளிடம் உள்ளம். புறக்கருவிகளான கண் காது முதலியவற்றின் தொடர்பால் மாசுறுவது பற்றித் தன்னைக் “களங் கொள் நெஞ்சினேன்” என்றும், நெஞ்சிடைப் போந்த கருத்துக்கள் சித்தம் முதலிய உட்கருவிகளால் தூய்மையும் தெளிவும் எய்திப் புத்தியால் உள்ளத்தில் நிறுத்தப்படுதலால், “உளம் கொளும்படி கண்டது” என்றும் உரைக்கின்றார். திருநாவுக்கரசரும், “என் நெஞ்சில் ஈசனைக் கண்டதென் உள்ளமே என்றும், “நெஞ்சினுள் நிறைவாய் நின்ற ஈசனைக் கண்டு கொண்டதென் உள்ளமே” என்றும் (பொது; உள்ளக்) கூறுவது காண்க.

     இதனால், ஈசன் உருவைப் புறக்கருவிகளாற் கண்டேற்ற நெஞ்சின் கண் புத்திதத்துவத் துள்ளத்திற் கொண்டமை புகன்றவாறாம்.

     (3)