666. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
உரை: மயக்கத்துக்கு இடமில்லாத திருமுல்லை வாயிலில் வீற்றிருக்கின்ற விலையில்லாத மாணிக்க மணியே, ஞான விளக்கமே, சிறிதும் மன நிறைவு கெடாத நன்மக்கள் கூடி நின்று வழிபடும் நின் திருக்கோயில் முற்றத்தே வலம் வந்து பரவுதற்கு யான் செய்த தவம் என்னையோ, அறியேன். எ.று.
மலைவு - மயக்கம். மக்கள் அறிவை நெறி பிறழ்ந்து மயங்கச் செய்யும் மயக்கம் ஈண்டு மலைவு எனப்படுகிறது. மலைவுகட்கு இடமாகாதது என்றற்கு “மலைவிலா முல்லை வாயில்” என்று கூறுகின்றார். மாசுடைய மணியாயின் தகுதிக்குறைவு பற்றி விலை பேசுவர்; இது மாசிலா மணியாதலின், “விலையிலா மணி” எனப்படுகிறது எனக் கொள்க. இருள் நீக்கி ஒளி செய்வதும் மணிக்கு இயல்பாதலால் “விளக்கே” என அடுத்து இசைக்கின்றார். நிலை பிறழ்தல் - நிலை குலைதலாகும். திண்ணிய அறிவும் மனமும் உடைய மெய்யன்பர்களைச் “சற்றும் குலைவிலாதவர்” என்று கூறுகிறார். மெய்யன்பர்களாகிய சிவத் தொண்டர்கள் கூடியிருந்து சரியை முதலிய நற்செயல்கள் புரிவதைக் குறிப்பாகப் புலப்படுத்தற்குக் “குலை விலாதவர் கூடும் நின் கோயில்” என்று குறிக்கின்றார். திண்ணிய அறிவும் செம்மையான நினைவும் திருந்திய செய்கையும் கொண்டு கோயிலிடத்தே இருந்தும் கிடந்தும் வலம் வந்தும் வழிபடுவது கண்டு வியந்த வள்ளலார், அவர்களுடன் தாமும் இருந்து ஒழுகுவதை நெஞ்சில் நினைந்து, இப்பேறு இனிய பயனுடைய தவத்தால் விளையும் பயனாம் என்று உரைப்பாராய், “கோயிலில் தலை நிலாவத் தவம் என்கொல் செய்ததே” என்று மொழிகின்றார்.
இதன்கண், திருமுல்லை வாயிற் கோயிலை யடைந்து சிவனைப் பரவி வழிபடுவது முன்னைத் தவப்பயனாம் என்று கூறியவாறு. (4)
|