667. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
உரை: சீர் மிகும் திருமுல்லை வாயிற் பதியில் அழகுற வீற்றிருக்கும் இயற்கை மணியே, கொன்றை மாலையணிந்த சடையுடைய கனி போன்றவனே, உனது இவ்வூர்க்கண் சிறப்புண்டாகத் தங்குவது எவ்வாறாம்? எ.று.
பொதுவாக அமைந்த நலத்தினும் சிறப்புற அமைந்ததே சீர் பயப்பது பற்றிச் “சீர் சிறக்கும்” என்று கூறுகின்றார். “சீர் சிறக்கும் மேனி” என அருணகிரியாரும் உரைப்பது காண்க. ஏர் - அழகு. அழகுற அமைந்தமை விளங்க, “ஏர் சிறக்கும்” என்கின்றார். செயற்கை மணி யன்று என விலக்கற்கு “இயல்மணியே” என இசைக்கின்றார். மணி - ஈண்டு மாணிக்கமாகிய செம்மணி. சிவன் செம்மேனியம்மானாதலின் இவ்வாறு கூறல் வேண்டிற்று. சிவனுக்கு முடிக் கண்ணியே யன்றி மார்பிற் றாரும் கொன்றை; அது பற்றியே “கொன்றைத் தார் சிறக்கும் சடைக் கனியே” என்று சாற்றுகின்றார். ஊர்க்கண் தங்கிச் சிவன்பால் நெஞ்சத்துள்ள அன்பு சிறக்க வேண்டுமென விழைகின்றாராதலின், “ஊர்க்கண் சிறக்க உறுவது” என்றும், உறுதற்குரிய வாய்ப்புக்கள் அமையாமை யறிந்து “உறுவது எவ்வண்ணம்” என்றும் கூறுகின்றார். அவற்றை அருளுபவன் முல்லைவாயிற் பரமனாதலால் அவனை முன்னிலைப் படுத்திப் பரவுகின்றார்.
இதன்கண், திருமுல்லை வாயிற்குச் சென்று சிவனை வழிபட்ட வள்ளலார் அவ்வூர்க்கண் தங்குதற்குக் கொண்ட விழைவு புலப்படுத்துமாறு காண்கின்றோம். (5)
|