668.

     சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
     பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
     மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
     கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

உரை:

     சேல் மீன்கள் வாழும் பொய்கைகளையுடைய திருமுல்லை வாயலில், பால்போலும் நிறமுடைய வெண்ணீறணிந்த பரஞ்சுடரே, எருதின்மேல் இவர்ந்து வரும் சங்கரனே, விமலனே, உன் திருவடியை நெஞ்சிற் கொண்ட அன்பர்கள் மனத்தில் கலக்கங்கொண்டு வருந்துவது நன்றன்று, காண். எ.று.

     சேல், மீன் வகையுள் ஒன்று. பொய்கை, நீர்நிலை. பால்கொள் எண்ணம் என்பதில் வண்ணம் ஆகு பெயரால் உணர்த்தும் திருநீற்றைப் பால் என்பது விசேடிக்கிறது. “பால் கொள் வெண்ணீற்றாய்” (அருட்) என்று திருவாசகம் உரைப்பது காண்க. சிவபிரான் செம்பொன் மேனியனாகலின், “பால்கொள் வண்ணன்” என்ற தொடர், பாலின் நிறமுடைய சிவன் என்றற்கு அமையாது ஆகு பெயர்ப் பொருளைக் கொள்ளச் சமைந்திருப்பது காண்க. சில திருக்கோயிலில் சிவமூர்த்தம் வெண்ணிறக் கல்லால் கடைந்தமை பற்றிச் சிவனைப் பால் வண்ணன் என்று கூறுதல் கொண்டு இவ்வாறு கூறினாரெனின், அதுவும் கொள்ளற்குரியதே ஆகும். உலகியற் சுடர்கள் எல்லாவற்றிற்கும் மேலாயதாகலின், சிவச்சுடர் “பரஞ்சுடர்” எனப்படுகிறது. ஊர்தி வெள்ளேறாதல் பற்றி, “விடைமேல் கொள் சங்கரன்” என்று கூறுகின்றார். சங்கரன், சுகத்தைச் செய்பவன். விமலன், மலமில்லாதவன்தான் மலமில்லாதவனானாலின்றி உயிர்களை அனாதியே பற்றி வருத்தும் மலத்தைப் போக்கானாதலால் விமலனாதல் இறைவற்கியல்பென அறிக. திருமுல்லை வாயிற்குத் தம்மொடு போந்த மெய்யன்பர்க்கு யாது காரணத்தாலோ மனத்தே கலக்கமுண்டாயினமையின், வள்ளற் பெருமான், “அன்பர் கலங்குதல் நன்றதோ” என்று முறையிடுகின்றார். அன்பரது எளிமை மிகுதி தோன்றக் “கால் கொள் அன்பர்” என்று உரைக்கின்றார். திருவடிக்கன்பராயினார் துன்புற்றுக் கலங்குதல் கூடாதென்று சிவனை வேண்டுகின்றாராதலின், “கலங்குதல் நன்றதோ” என்று இசைக்கின்றார்.

     இதனால், வள்ளற்பிரான் திருமுல்லை வாயிற்கு அடியார் சிலருடன் போந்தபோது அவர்கள் யாதோ துன்புற்றுக் கலங்கிய செய்தி தெரிகிறது.

     (6)