669. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
உரை: அழகிய முல்லை மலர்கள் மிக்குள்ள திருமுல்லைவாயிற் பதியில் எழுந்தருளும் அண்ணலே, அமுதம் போன்றவனே, அரசே, நெற்றியிலே கண்ணுடையவனே, உன்னைக் காண்டற்கு வந்த அடியார்க்கெல்லாம் எய்துதற்கரிய துயரத்தை உண்டாக்குவது நன்றாகாது. எ.று.
அழகிய முல்லைகள் மலர்ந்து மணம் கமழும் பதியாதலின் திருமுல்லை வாயிலை “வண்ணமா முல்லை வாயில்” என்று புகழ்கின்றார். அண்ணல், தலைவர். நினைவார்க்கு நெஞ்சில் இன்பம் சுரப்பது பற்றி, “அமுதே” என்றும், அருளரசு புரிதலின், “அரசே” என்றும் பாராட்டுகின்றார். முல்லைவாயிற் பெருமானைக் கண்களாற் கண்டு வழிபட்ட அன்பர்களைக் “காண வந்தோர்” என்றும், அவர் பலர்க்கும் பொறுத்தற்கரிய மிக்க துன்பம் எய்தியது கண்டு வருந்துகின்றாராதலின், “உனைக் காண வந்தோர்க்கெலாம் நண்ணருந்துயர் நல்குதல்” என்றும், துயர் எய்துவித்தல் நன்றன்று என்றற்கு, “நல்குதல் நன்றதோ” என்றும் உரைக்கின்றார்.
இவ்விரண்டு பாட்டாலும் திருமுல்லைவாயிற்குத் தம்முடன் போந்த அன்பர்கட்கு மிக்க துன்பம் எய்தியது பற்றி இறைவனிடம் முறை யிட்டவாறு. (7)
|