67. தணியாத துன்பத் தடங்கடல் நீங்க நின்
றண்மலர்த் தாள்
பணியாத பாவிக் கருளு முண்டோ பசு
பாச மற்றோர்க்
கணியாக நின்ற வருட் செல்வமே தணி
காசலனே
அணி யாதவன் முதலா மட்ட மூர்த்தம்
அடைந்தவனே.
உரை: தணிகை மலையை யுடைய பெருமானே, சூரியன் முதலிய எட்டுருவாகியவனே, பசு பாசம் என்னும் தளை யற்றவர்க்கு எடுத்துக் காட்டும் அணியா நின்று அருள் வழங்கும் செல்வமாய் உள்ளவனே, உன்னுடைய குளிர்ந்த மலர் போன்ற திருவடியைப் பரவிப் பணியாத பாவியாகிய எனக்கு யான் உறும் குறையாத துன்பக் கடலினின்று நீங்குதற்கு உனது அருள் உண்டாமோ, கூறுக, எ. று.
ஆதவன் - சூரியன். சூரியன், சந்திரன், உயிர்க்குயிர், நிலம், நீர், தீ, காற்று, வானம் என வரும் எட்டும் அவனுருவாம் என்பது பற்றி “அட்ட மூர்த்தம் அடைந்தவனே” என்று கூறுகிறார். “அட்டமா வுருவினானே ஆவடு துறையுளானே” (ஆவடுதுறை) என்று சான்றோர் உரைப்பர். “அட்ட மூர்த்தியனே அஞ்சல் என்றருள்” (ஆலவாய்) என்பர் திருஞான சம்பந்தர். பசு பாசம் - பசுவாகிய உயிரைப் பிணித்திருக்கும் மலம் மாயை கன்மம் என்ற மும்மலங்களாகிய பாசம். மல மறைப்பும் மாயை கன்மங்களின் தொடர்பும் உயிர்களைப் பிணித்துக் கொண்டிருத்தலால் பாசம் எனவும், பாசத்தால் கட்டப்படுவதால் உயிர் பசு எனவும், பெயர் பெற்றுள்ளன. திருவருளால் பசு பாசம் அறுதல் பற்றி, “பசு பாசம் அற்றோர்க்கு அணியாக நின்ற அருள் செல்வமே” எனப் பரவுகின்றார். “பசுபாச வேதனை யொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்” (முதுகுன்று) என ஞானசம்பந்தர் கூறுவது ஈண்டு நினைவு கூரற்பாலது. பசு பாசத் தளைகளால் துன்பம் கடல் போல் பெருகுதலால், “தணியாத துன்பக் கடல்” எனவும், அத்துன்பம் நீங்குதற்கு இன்றியமையாத திருவருள் பெருமான் திருவடிக்கண் பற்றும் பணிதலும் இல்லாவிடத்து எய்தப்படாமை கண்டு, “நின் தண்மலர்த்தாள் பணியாத பாவிக்கு அருளும் உண்டோ” எனவும் இயம்புகின்றார். பணியாமைக்கு ஏது முன் செய்த பாவம் என்பார், “பாவிக்கு” என்று குறிக்கின்றார். “முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையில் மூழ்கிறீர்” (கோடிகா) என ஞானசம்பந்தர் அறிவிப்பது காண்க.
இதனால் துன்பக்கடல் நீங்க அருள் ஞானம் தருக என்று வேண்டியவாறாம். (67)
|