670.

     மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
     கண்ணுண் மாமணி யேகரும் பேஉனை
     எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
     பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.

உரை:

     மண்ணின் மேல் உயர்ந்து வளரும் முல்லைகள் மிக்க திருமுல்லைவாயிலில் எழுந்தருள்கின்ற கண்மணி போல்பவனே, கரும்பாய் இனிப்பவனே, உன்னை நினைந்து வழிபடும் அன்பர்கள் துயருற்றுததாழ்வார்களாயின் அவர்களை உயர்வெய்தப்பண்ணும் நின் திருவருள் இந் நிலவுலகில் நன்கு வாழ்க. எ.று.

     மண்ணென்றது தரை. தரையிற் படாது உயர்ந்தோங்கி வளரும் முல்லைகள் மிக்குற்ற ஊர் திருமுல்லைவாயில் என்றற்கு “மண்ணின் ஓங்கி வளர் முல்லை” என்று சிறப்பிக்கின்றார். கண்ணின் மணி, காண்பன காண்டற்குத் துணையாதல் போல இறைவன் கருவி கரணங்களாற் காணப்படும் நுண்பொருளை இனிதுணரத் துணை செய்தலால் கண்ணுள் மணியே என்னாது “கண்ணுள் மாமணியே” என்று புகழ்கின்றார். கரும்பு, தின்பார்க்கு இனிமைச்சுவை நல்கல் போலச் சிந்தைக்கண் தன்னை நினைவார்க்கு இன்பம் தருதல் பற்றி “கரும்பே” என்கின்றார். செய்வினைத்தவற்றால் துன்பமும் தாழ்வும் மக்கட்கு உண்டாவன; இறைவன்பால் அன்புடையார்க்கும் தவறுண்டாத லுண்டென்றல்பற்றி, “உன்னை எண்ணும் அன்பர் இழிவடைந்தால்” என்றும், அந்த அன்பர் இறைவனை மறவாமல் எண்ணும் இயல்பினராயின், அத் தாழ்வு போக்கி அவன் திருவருள் உயர்வின்கண் இருத்தி மகிழ்விக்கும் என்றற்கு, “நின் அருள் அது பண்ணும்” என்றும், அதனால் உலகுயிர்கள் தவறு நீங்கி இன்பவாழ்வு பெறல் கை கூடுதலால், அது என்றும் நிலைபெறுக என வாழ்த்துவாராய், “அருள் பாரிடை வாழ்கவே” என்று உரைக்கின்றார்.

     இதனால், தவறு செய்வாரைத் தாழ்விக்கும் இறைவன் திருவருள் அவனை நினைந்தவரைத் தாழ்வு போக்கி உயர்வு படுத்தும் எனக் குறித்தவாறு.

     (8)