671. தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
உரை: குற்றமில்லாத திருமுல்லை வாயிலில் கோயில் கொண்டிருக்கும், குறை சிறிதும் இல்லாத பெருங் குணக்குன்றமே, முரணுதலின்றி உன்னை வாழ்த்தி வணங்கவந்த அன்பர்களை, ஏதிலார்போல நோக்கி வாளா இருப்பது என்னையோ, கூறுக. எ.று.
தீது என்றது வளம் குன்றி வேறுபடுவதாகிய குற்றம். ஒரு காலத்துயர்ந்த வளம் பெற்றிருந்து பிறிதொரு காலத்து அது குன்றுதலும், வாழ்வோர் இடம் பெயர்ந்து போய்விடுவதும் ஊர்கட் குண்டாகும் குற்றம். அக்குற்றம் உண்டாகாமை பற்றித் “தீதிலாத திருமுல்லைவாயில்” என்று குறிக்கின்றார். குணங்களால் குறைவும் நிறைவும் பொருந்திப் பெருமை பிறங்குவது பற்றி முல்லை வாயிற் சிவபெருமானைக் “கோதிலாத குணப்பெருங் குன்றமே” என்று கூறுகின்றார். குணப்பெருங்குன்றம் என்பதைப் பெருங்குணக் குன்றமே என்று மாறுக. இவ்வியல்பு பற்றியே சான்றோரும் “குறைவிலா நிறைவே” என்று சிவனைப் பாராட்டுகின்றார்கள். வாது, ஈண்டு முரண்பட்டு எதிர்த்தல். அன்பின்மையால் பிணங்குவார்பால் காணப்படும் இச்சிறுமை உண்மையன்புடையார்பால் இன்மை விளங்க, “வாதிலாதுனை வாழ்த்த வந்தோர்” என்று உரைக்கின்றார். “பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்” (கழுக்குன்) என்று திருவாசகம் உரைப்பது காண்க. மெய்யன்புடையார் மேவுங்கால் இனிது நோக்கி நல்லுரை வழங்கி ஆதரவு செய்வது முறையே யன்றி அயன்மைப்பட நோக்கிப் புறக்கணித்துப் போக்குவதன் கருத்து விளங்காமையால் “ஏதிலார் என்றிருப்பதும் என் கொலோ” என்று இயம்புகின்றார்.
இதன்கண் குணக்குன்றமாகிய நீ மெய்யன்புடன் வணங்க வரும் அடியார்களை அன்பு கனிய நோக்கி ஆதரவு செய்யாது அயன்மைப்பட நோக்கி விடலாகாது என முறையிட்டவாறாம். (9)
|