672. தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யேமருந் தேசற்றும்
கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
உரை: புகழ் பொருந்திய திருமுல்லை வாயிலில் வீற்றிருக்கின்ற மாசிலாமணிப் பெருமானே, மருந்து போன்றவனே, செய்த தவற்றுக்காக மனம் கூசாமல் நின் திருக்கோயிற்கு வந்து உனது புகழை யோதிப் பரவாத குற்றத்தைப் பொறுத்து அருள் புரிக. எ.று.
தேசு - ஒளி; ஈண்டுப் புகழொளி மேற்று. முல்லை வாயிலில் சிவனை மாசிலாமணி எனப் பெயரிட்டு வணங்குவதுபற்றி, “மாசிலா மணியே” என்று கூறுகின்றார். பிறவிப் பிணிக்கு மருந்தாய்ப் போக்கியருளும் நலம் குறித்து “மருந்து” என்கின்றார். இறைவன் புகழை விரும்பி அவன் திருக்கோயிற்குச் சென்று வணங்குதல் குணமான செய்கை; அதனைக் கைவிடல் குற்றம்; குற்றம் புரிந்தார் அதனை யுணர்ந்த வழி நாணுவராதலால், “சற்றும் கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் பேசிடாத பிழை” என்று இசைக்கின்றார். பெரியோர் பேணிப் பரவும் பெருமானாகலின், ஏனையோர் சிறுமையியல்பாற் செய்த பிழை பொறுத்து வேண்டும் அருள் செய்வது நன்றாம் என்றற்குப் “பிழை பொறுத்தாள்வையே” என்று முறையிடுகின்றார்.
இதனால், அடியார் செய்த பிழை பொறுத்தருளி ஆட்கொள்ளல் வேண்டும் என்றவாறு. (10)
|