11. கொடைமடப் புகழ்ச்சி
திருவொற்றியூர்
செல்வமுடைய
பெருமக்கள் வறுமையால் தாழ்வுற்று வந்தார்க்கு வேண்டுவதளித்து உதவுவது ஈகை எனப்படும். வறுமை
யுறாராயினும் காலம் நோக்கியும் இடம் பற்றியும் யாதானும் ஓர் உதவி நாடுவதும், உடையோர்
உதவி செய்வதும் உலகியல். எல்லாரும் எல்லாப் பொருளும் உடையராய் நிரம்பியிருத்தல் இல்லை.
உள்ளவர்பால் உதவி பெறுவோருள் தாழ்ந்தவர்க்களிப்பது ஈதல் என்றும், ஒத்தவர்க் குதவுதல்
தருதல் என்றும், உயர்ந்தோர்க் குதவுவது கொடை என்றும் தமிழரினத்தில் வழங்குவதுண்டு.
நாளடைவில் இச் சொல் வேறுபாடு தொலைந்தது. யாவர் யாவர்க்குதவினும், இந்நாளில் அதைக்
கொடுத்தலென்றும், தருதலென்றும், ஈதலென்றும் வழங்குகின்றனர். இந்நிலையில் கொடுப்பவர்
கொடுக்குமிடத்துக் கொடைப்பொருளின் அளவும் இயல்பும் எண்ணாமல் அன்பு மிகுதியால் அள்ளிக்
கொடுப்பர். அதனைக் கொடைமடம் என்பர். சிலர் புகழ் குறித்தும் பொதுநலம் கருதியும்
கொடைமடவோராவர். அதற்கு அவர் புகழ் பெறுவர். கொடை புரிதல் புகழ்க்குரித்தாதலால்,
கொடுப்பவர் புகழ் பெறுவது உரிமையாகிறது. கொடை புரிவதில் அறிவுவிளங்கினும் மடமை நிலவினும்
புகழ் எய்துதல் ஒழிவதில்லை. அதனால் முன்னை நாளிலும் இந்நாளிலும் கொடைமடம் அறிஞரால்
பாராட்டப்படுகிறது. பொருட் செல்வரிடத்துக் காணப்படும் கொடைமடம், அருட் செல்வனாகிய
சிவபெருமானிடத்தும் காணப்படுகிறது. “உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க் கொன்று,
ஈவார் மேல் நிற்கும் புகழ்” என்று சான்றோர் கூறுப. அவ்வகையில் சிவனது கொடைமடமும்
புகழப்படுகிறது. கொடைமடம் என்பது கொடுக்கப்படும் பொருளளவும் பெறுவோர் தகுதியும் நோக்காமை
குறிப்பதாயினும், கொடுப்போர்க்கு இருக்கவேண்டிய நற்பண்பு இல்லா தொழியினும், அன்றி
அவர்க்குக் கொடைக்குரிய பண்புகள் இவை யென்பது தெரியாதொழியினும் அது கொடைமடமாதல்
அமைகின்றது. இரப்போரை இனிது நோக்குதலும், அவர்க்கு இன்னுரை வழங்குதலும் இல்லாமையும்
கொடைமடமாகிறது. அருள் வேண்டியும் பொருள் வேண்டியும் தமையடைந்து பாடும் அன்பர்க்கு ஒன்றும்
கொடாமையேயன்றி வாய் திறந்து ஒரு சொல்லும் சொல்லாமையும் கொடைமடமாம். அம் மடமை
ஒற்றியூர் இறைவன்பால் காணப்பட்டமை பாட்டுத் தோறும் கூறுதலால் இதனைக் கொடைமடப்
புகழ்ச்சியென்பது ஒரு வகையில் பொருத்தமாகிறது. பின்வரும் பாட்டுக்கள் பத்தினும்
சிவபெருமானுடைய கொடைமடம் புகழ்ந்து கூறப்படுகிறது.
வடலூர் வள்ளல் திருவொற்றியூர்க்கண்
இருந்து தியாகப் பெருமானது கொடை நலத்தைப் பாடுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 673. திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: நிலைபேறு கொண்ட திருமாலும் பிரமனும் வாழ்த்திப் போற்றத், தியாகர் என்னும் ஒரு அழகிய பெயர் கொண்டுள்ளீர்; மேன்மையே கொண்ட செயற் கூறுடையராக இருக்கின்றீர்; உம்முடைய திருமுன் வந்தால் வாயைத் திறந்து ஒரு சொல்லையும் சொல்லுகின்றீரில்லை; ஒன்று வேண்டி வந்து இரப்பவர்க்கும் ஒன்றும் கொடுக்கின்றீரில்லை; இது நும் இயல்பாயின், ஐயனே, வன்மை மிக்க தவமுடைய சான்றோர் துதித்து ஓங்க உயரும் புகழ் படைத்த திருவொற்றியூரை யுடைய பெருமானே, நீர் தியாகர் என்ற பெயர் கொண்டது எதன் பொருட்டோ, கூறுக. எ.று.
உரம் - வன்மை. தவத்தால் மனவன்மையும் ஞானப் பெருமையும் உடைய சான்றோர் நாளும் பரவுவதால் திருவொற்றியூர் மிக்க புகழ் உறுகிறது என்பாராய், “உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க, ஓங்குசீர் ஒற்றியூர்” என்று உரைக்கின்றார். ஒற்றியூர்ச் சிவபெருமானைத் தியாகர் என்றும், திருவொற்றித் தியாகரென்றும் ஊரவரும் நாட்டவரும் நவில்வது மரபு; பிரமன் திருமால் முதலிய தேவர்களும் தியாகர் என்ற பெயரை விரும்பி வாழ்த்துகின்றார்; இவ்வகையில் தியாகர் என்ற பெயர் உறுதியாக அமைந்துவிட்டது என்பாராய், “திருமால் அயன் வாழ்த்தத் தியாகர் என்னும் ஓர் திருப்பெயர் அடைந்தீர்” என்று கூறுகின்றார். திருமாலும் அயனும் திரமான தேவர்களாதலால் தியாகரென்ற புகழ் சிறப்புற நிலைத்துவிட்ட தென்றற்குத் “திரப்படும் திருமால் அயன் வாழ்த்த” என்கின்றார். வரம் - மேன்மை. மேன்மைக்குரிய தன்மை, வரப்படும் திறம் எனப்படுகிறது. சிவனுடைய மேனி நலமே யன்றிக் குணஞ் செயற் கூறுகளும் மேன்மையுறுவனவாதலால் சிவனை “வரப்படும் திறத்தீர்” என்று உரைக்கின்றார். தியாகப் பெருமான் முன்னின்று பாடியும் பரவியும் பணிகின்றாராக, சிவனுடைய திருவாயில் ஒரு சொல்லும் வரக் காணாமையால் வருந்தியவராய், “உமை யடைந்தால் வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” என உரைக்கின்றார்.இரப்பவர்க்கு ஈவது ஈகை. அதனைத் தானும் ஒற்றியீசன் செய்கிலர்; தியாகர் என்ற சொல்லுக்குக் கொடுப்பவர் என்பது பொருள்; இரப்பார்க்கு ஈயாதவர் தியாகர் என்ற பெயரைக் கொண்டிருப்பது பொருந்தாது என்று பேசலுற்று, “இரப்பவர்க் கொன்றும் ஈகிலிரானால்யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்” என்று வினவுகின்றார். ஊரவரும் நாட்டவரும் பிறரும் தியாக ரென்ற பெயரை எடுத்தோதிப் போற்றுவது தோன்ற, “இப்பெயர் எடுத்தீர்” என மொழிகின்றார்.
எடுத்த பெயருக்கேற்ப ஒழுகுவதைக் கைவிட்டு அதற்கு மாறாக இயல்வது பொருந்தாது எனப் புகன்றவாறு. (1)
|