675. கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
களிக்க வேபடிக் காசளித் தருளும்
வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: சிறப்புமிக்க திருவொற்றியூரை யுடைய பெருமானே, கள்ளமில்லாத உள்ளமுடையவரான திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் மனம் மகிழுமாறு வீழிமிழலையில் படிக்காசளித்து ஆதரித்த வள்ளலாவர் என்று எண்ணி, உம்முடைய திருமுன் வந்தடைந்து யாதேனும் உதவுக என்று இரந்து நின்றால், திருவாய் மலர்ந்து ஒரு சொல்லும் சொல்லா திருக்கின்றீர்; இகழ்தற்கில்லாத புகழ் நிறைந்த “தியாகர்” என்று ஒரு பெயரையும் பூண்டிருக்கின்றீர்; அதை ஏன் ஏன்று கொண்டீர்; இரப்பவர்க்கு வேண்டுவதொன்று ஈவதற் கன்றோ? எம் போல்வார் உள்ளக் கருத்தை நன்கறிவீராதலின், என்னை ஆண்டருளுக. எ.று.
நினைவு சொற் செயல்கள் ஒன்றினொன்று வேறுபடாத நல்லியல்பின ராதலால், திருநாவுக்கரசரைக் “கள்ளமற்ற வாக்கரசு” என்று உரைக்கின்றார். கள்ளமற்ற என்பதைப் புத்திரரென்ற ஞானசம்பந்தர்க்கும் ஏற்றுக. அவரும் கள்ளம் கபடமற்ற திருவுள்ள முடையவரென அறிதல் வேண்டும். இருவரும் வீழிமிழலையில் இருந்தபோது காலக் கோளாற்றினால் பஞ்சம் எய்தியபோது இருவர்க்கும் இறைவன் படிக்காசு தந்து மகிழ்வித்த அருட்செயலை வியந்து, “வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்தருளும் வள்ளல்” என்று உரைக்கின்றார். இஃது வரலாற்றுண்மையாதலின், எடுத்தோதி “படிக்காசு அளித்தருளும் வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்” என்று விண்ணப்பிக்கின்றார். வரலாற்றறிவால் வள்ளல் என்பதை நெஞ்சிற் கொண்டதோடு வாய் திறந்து புகழ்ந்து வந்தமை விளங்க, “வள்ளலென்றுமை வந்தடைந்து ஏற்றால்” என்றும் என உரைக்கின்றார். ஒரு விடையும் எய்தாமை தோன்ற, “வாய்திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” என்று சொல்லுகின்றார். தியாகர் என்ற பெயர் எய்தியதும், அதனைப் பலரறிய ஏற்றிருப்பதும் நினைக்கின்ற வள்ளற்பெருமான், தியாகர் என்ற திருப்பெயர் ஒருகாலும் வள்ளற்கு வழங்குவதன்று; எய்துவதும், ஒருவர் அதனை ஏற்பதும், இரப்பார்க்கு ஈத்து மகிழ்விக்கும் ஏற்றம் பற்றியாகும் என்பது புலப்பட, “எள்ளரும் புகழ்த் தியாகரென்றொருபேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இடவன்றோ” என இயம்புகின்றார். ஈயும் திறமில்லாதவர் அத்திருப்பெயரைக் கொள்வது எம் போல்வார்க்கு ஏமாற்றமாம் எனினுமாம். அடியேன் உள்ளத்தின் தன்மையை அதன் உள்ளிருந்து நோக்கும் பெருந்தகையாதலின் நீ நன்கு அறிவாய்; வேண்டுவதளித்து ஆண்டருள் என்பாராய் “உள்ளம் இங்கறிவீர் எனை ஆள்வீர்” என முறையிடுகின்றார்.
இதன்கண், தியாகர் என்று பெயர் புனைந்துகொண்டு இரப்போர்க்கிடாமலும் வாய் பேசாமலும் இருப்பது நன்றன்று என்றவாறாம். (3)
|