676. அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: சிறப்புமிக்க திருவொற்றியூரில் உள்ள பெருமானே, அணுக்கத் தொண்டராயிருந்த சுந்தரமூர்த்திகள் அந்நாள் திருக்கச்சூர் ஆலக்கோயிற்கு சிவவழிபாட்டுக்கென வந்தபோது அவர் பசியறிந்து மனைகளிற் சோறு இரந்து கொண்டு அளித்த வண்மையைக் கற்றோர் சொல்லக் கேட்டு இங்கு வந்து உன் திருமுன் அடைந்து இரந்து நின்றால், வாயைத் திறந்து ஒரு சொல்லும் சொல்லாமல் இருக்கின்றீர்; திண்மை பொருந்திய திருமாலாகிய விடையிவர்ந்து வருபவரே, தேவ தேவனாகிய உமக்கும் சிறுமை உளதாவதுண்டோ? உண்மையாக உரைக்குமிடத்து உம்மை யன்றி வேறு எவரையும் அடியேன் அறியேன்; ஆதலின் எனக்கு அருள் செய்க. எ.று.
கயிலைமலையில் சிவபிரானுக்கு அணிமையிலிருந்து பணிபுரியும் வாய்ப்புடையவர் சுந்தரர்; அதனால் அவரை அணுக்கத் தொண்டர் என்பர்; அக் கருத்தே விளங்க, “அண்மையாகும் சுந்தரர்” எனக் கூறுகின்றார். திருக்கச்சூரில் உள்ள சிவன் கோயில் ஆலக்கோயில்; ஆலக் கோயிற்குச் சிறிது அண்மையில் கச்சூர் உளது; கச்சூரில் சோறிரந்து கோயிற்கண் இருந்த சுந்தரர்க்குச் சோறளித்த வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. அளித்த வண்மை - அளித்தற் கேதுவாகியிருந்த வண்மை. தந்த தெய்வம் தரும் என்றறற் கொப்ப, சோறளித்த பெருமான் அருள் கரவாமல் அளிப்பன் என்பது பற்றி, “அளித்த வண்மை கேட்டு இங்கு வந்தடைந்து ஏற்றால்” என்று இயம்புகின்றார். விடையொன்றும் எய்தாமைக்கு மனம் வருந்துமாறு விளங்க, “வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” என வுரைக்கின்றார். ஊர்தியாகும் ஏறு திண்ணிதானாலன்றி இவர்ந்தேகுதல் இனிதின் அமையாமை யெண்ணி “திண்மை சேர் திருமால் விடையூர்வீர்” என்றும், இரப்பார் இரக்கும் பொருள் இல்லாமல் சுருக்க முண்டாயின் கொடுப்பவன் இலன் என்று உரைத்தற்கு அஞ்சி வாய் வாளாதிருப்பர்; நீ அது செய்கின்றாய் என்பாராய், “தேவரீருக்குச் சிறுமையும் உண்டோ” என்று கூறுகின்றார். எளியேனாகிய எனக்கு உன்னையன்றி உதவுவார் ஒருவரும் இல்லை; வேறு பிறரிடம் யான் சென்றுமறியேன் என்றற்கு. “உண்மையான் உமையன்றி மற்று அறியேன்” என மொழிகின்றார்.
இதன்கண், இறைவன் வாய் திறவாதிருப்பதற்குக் காரணம் அவன் பாலும் பொருட் சிறுமை எய்திவிட்டதோ என வருந்திக் கூறுகின்றார். (4)
|