677.

     சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
          சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
     வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
          வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
     இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
          என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
     உந்தி வந்தவ னோடரி ஏத்த
          ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

உரை:

     திருமாலின் உந்தியில் தோன்றிய பிரமனுடன் அத் திருமாலும் வழிபட்டேத்தச் சிறப்புமிக்க திருவொற்றியூரையுடைய பெருமானே, இன்மையால் மனம் வருந்திப் பிறரை அடையாமல் உமது திருப்பெயரைக் கேள்வியுற்று வந்து புகுந்த எளியேனுக்கு நீ கேட்பது உண்டு, அல்லது இல்லை என்று ஒரு சொல்லையேனும் வாய் திறந்து சொல்லாதொழிகின்றீர்; இவ்வண்ணமே நீர் இருப்பீராயின் உம்மை இவ்வுலகத்து மக்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? எண்ணியருளல் வேண்டும். எ.று.

     திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினவன் பிரமன் என்பது பற்றி, “உந்தி வந்தவன்” என்றும், அவனும் திருமாலும் ஒருங்கு வணங்கி வழிபட்டேத்துமாறு விளங்க, “அவனோடரி யேத்த” என்றும், இவர்கள் வழிபட்டேத்துதலால் திருவொற்றியூர் சிறப்பு மிகுவது விளங்க, “ஓங்குசீர் ஒற்றியூர்” என்றும் உரைக்கின்றார். பொருளின்மை யாவர் மனமும் வாடி வருந்தச் செய்வதுபற்றிச் “சிந்தை நொந்து” என்றும், வறுமையால் வாடுபவர் உயிர் விடுதலின்றி, உலகில் பொருளுடையாரை நாடிச் சென்று இரப்பது இயல்பு; ஆனால், யான் பிறரை அடைந்திலேன் என்றற்கு “உலகிற் பிறர் தம்மைச் சேர்ந்திடாது” என்றும் இயம்புகின்றார். சிவபெருமானை யடைந்தமைக்குக் காரணம் கூறலுற்றவர், கொடையாளி என்ற பொருள்படத் தியாகர் என்ற பெயர் கொண்டிருப்பதைப் பலரும் சொல்லக்கேட்டு நயப்புற்று வந்தமை விளங்க, “திருப் பெயர் கேட்டு வந்தடைந்த எற்கு” என்றும், வாய் திறந்து இரந்து கேட்ட எனக்கு உண்டு அல்லது, இல்லை என்ற சொற்கள் இரண்டனுள் ஒன்றை வாய் திறந்து சொல்லுகின்றீரில்லை என்பாராய், “உண்டு இலை எனவே வாய்திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்” என்றும், இச்செயல் உலகில், நாட்டில் யாவரும் அறியப் பரவிவிடுமாயின், மக்கள் பலபடப் பேசி இகழ்வர்காண் என்பாராய், “இந்தவண்ணம் நீர் இருந்திடுவீரேல் என்சொலார் உமை இவ்வுலகத்தார்” என்றும் சொல்லி வடலூர் வள்ளல் வருந்தி உரைக்கின்றார்.

     இதன்கண், திருவொற்றியூர் இறைவன் வாய் திறந்து ஒன்றும் உரையாமை பற்றி உலகத்தவர் பலபடப் பேசி இகழ்வாராதலின் ஒன்று உரைத்தருள்க என வேண்டிக்கொண்டவாறாம்.

     (5)