678.

     கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
          கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
     வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
          வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
     இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
          இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
     ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
          ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

உரை:

     செங்கல்லைப் பசும்பொன்னாகச் செய்துதவிய அருட் செயலைக் கேள்வியுற்று உம்பால் அன்பு மிகுந்து இங்கே விரைந்து வந்து திருமுன்னின்று இரந்து கேட்டால் சிறிதேனும் வாய்திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீரில்லை; சீர் ஓங்குகின்ற திருவொற்றியூரை யுடைய பெருமானே, பொருளில்லாமையால் நீர் மனைதோறும் சென்று பிச்சை யெடுக்கின்றீ ரென்றாலும், அது செய்பவரும் தம்பால் வந்த பிறருக்கு அளித்துத் தாம் உண்பர்; இவ்விடத்து எனது உள்ளத்தை விரைந்து நீவிர் கவர்ந்து கொண்டீர்; அதனையும் நன்கு அறிவீர்; வாய் திறந்து ஒரு சொற் சொல்லி ஆதரித்தருள்க. எ.று.

     சுந்தரர்க்குப் பொன்னருளும் பொருட்டு அவர் தலைக்கணையாகக் கொண்டுறங்கிய செங்கல் பொற்கல்லாயின அற்புதம், இங்கே, “கல்லையும் பசும்பொன்னெனப் புரிந்த கருணை” என்று குறிக்கப்படுகிறது; இச் செய்தியை “வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி” (ஏயர். 50) என்று சேக்கிழார் தெரிவிப்பது காண்க. சுந்தரர் போல அடியேனும் உமது திருவடிக்கண் அன்பு மிகுந்து விரைவுடன் வந்தேன் என்பாராய், “உமைக் காதலித்து இங்கு வல்லை வந்து நின்று இரந்தேன்” என்று உரைக்கின்றார். பன்முறை யிரந்து கேட்டும் ஒரு சொல்லும் விடையாக எய்தாமையின், “சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்” என்று இசைக்கின்றார். ஒற்றியூர் இறைவனை இரப்பதிற் பயனில்லை, அவன் வீடுதோறும் இரந்துண்பவன் என்பது நினைந்து, “இல்லை நீர் பிச்சை எடுக்கின்றீரேனும்” என மொழிந்து, தாம் இரந்துண்பதாயினும் தம்பால் அடைந்தோர்க்கு இரந்ததில் ஒரு சிறிது அளித்துண்பது இயல்பு என்பதுணர்த்தற்கு, “இரக்கின்றோர்களும் இட்டுண்பர் கண்டீர்” என்று கூறுகின்றார். உற்றவிடத்து நீவிர் உதவினும் உதவாதொழியினும் என் உள்ளம் உமது திருவடிக்கண் அன்பு மிகுந்து ஒன்றியுளது; அதனை மாற்ற முடியாது; இதனை நீவிர் உணர்தல் வேண்டும் என்பாராய், “ஒல்லை இங்கெனது உளங்கொண்ட தறிவீர்” என உரைக்கின்றார்.

     இதனால், பிச்சை யெடுத்துண்பது கூறி மறுக்கினும், விடாது எடுத்த பிச்சையிற் சிறிது பெற்றே தீர எனக்கு அன்பு மிகுகிறது என்று கூறியவாறாம்.

     (6)