679. துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
அடிய ணேன்அலை கின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: சிறப்பு மிகும் திருவொற்றியூரை யுடைய பெருமானே, கண்களில் நீர் சொரிய மனம் சோர்வுமிகத் தலைவனாகிய உம்மையே துணையென்று நம்பி காற்றிற் சிக்கிய பஞ்சு போல்பவனாய் யான் உன்பால் வந்து இரந்து நின்றேனாக, வாயைத் திறந்து ஒரு சொல்லும் உரைக்கின்றீரில்லை; தன்னை அடைந்தவர்கள் வேண்டுவன அளித்தருளும் தன்மையையுடைய நீர் இனிது வாழ்ந்திருக்க, உமக்கு அடியவனாகிய யான் தெருவில் திரிந்து அலைவது அழகாகாது; உள்ளதை இல்லையென ஒளித்துரைக்கும் வன்மைத்திறம் உம்பாலும் உண்டோ, தெரியேன். எ.று.
இம்மைத் துயரால் வருந்தி வருவது விளங்க, “துளிக்கும் கண்ணுடன்” என்றும், “நெஞ்சம் சோர்வுற” என்றும் உரைக்கின்றார். தோன்றல் - புகழ்பெற்ற தலைவன். இடுக்கண் உற்றபோது வேண்டுவன உதவி வாழ்விப்பவரே நல்ல துணைவர்; அத்தகைய துணைவனென இறைவனையே நம்பியிருந்தமை புலப்பட, “தோன்றலே உமைத் துணையென நம்பி” என்றும், அந்த நம்பிக்கையே மிக்குத் திருவொற்றியூரில் தெருத்தோறும் அலைந்தமை விளங்க, “வளிக்குள் பஞ்சனையேன் அடைந்தேற்றால்” என்றும் இயம்புகின்றார். “அடைந்தபோது இரப்பவர் என்பெறினும் கொள்வர்” என்ற பான்மையுடன் இருந்தமை புலப்பட, “அடைந்’’தென அமையாமல், ஏற்றால் என மிகுத்துக் கூறுகின்றார். துன்பமிகுதி கூறும் உலகவர், “காற்றிற் பட்ட பஞ்சு போல” என்பர். அதனையே விதந்து “வளிக்குள் பஞ்சனையேன்” என மொழிகின்றார். அடைந்தார்க்குப் பேரருள் வழங்கும் பெருமான் என்பது பற்றி “அளிக்கும் தன்மையீர்” என உரைக்கின்றார். “தாமென்று மனந்தளராத் தகுதியரய் உலகத்துக் காமென்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான்” (பிரமபுரம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அருளாளன் அருணிழலில் வறுமை கூறி வருந்துவோர் உளராவது இல்லை என்பது வற்புறுத்தற்கு “அடியனேன் அலைகின்றதும் அழகோ” என்று முறையிடுகின்றார். இரப்பார்க்கு இல்லையென மறுத்துக் கரக்கும் சிறுமை பெருமக்கள்பால் இருத்தல் கூடாதென்பது இனிது கூறலுற்று, “ஒளிக்கும் தன்மைதான் உமக்கும் உண்டேயோ” என உரைக்கின்றார். கரக்கும் தன்மையுடையவரைச் சான்றோர் இரக்கமின்றி வைவர். “இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப் பக்குவிடும்” (1068) என்பது திருக்குறள்.
இதனால், வார்த்தை சொல்லாமைக் கேது ஒளிக்கும் தன்மை போலும் எனக் கருதுவது காண்க. (7)
|