68.

    அடையாத வஞ்சகர்பாற் சென்றிரந்திங்
        கலைந் தலைந்தே
    கடையான நாய்க்குன் கருணை யுண்டோ
        தணிகைக்கு ணின்றே
    உடையாத நன்னெஞ்சர்க் குண்மையைக்
        காண்பிக்கும் உத்தமனே
    படையாத தேவர் சிறைமீட் டருளித்தருள்
        பண்ணவனே.

உரை:

     தணிகைப் பதியில் எழுந்தருளி யிருந்து துன்பத் தாக்குதல்களால் வலி கெடாத நல்ல மனமுடைய பெருமக்களுக்கு மெய்ப் பொருளை யுணர்த்தும் உத்தமனான முருகப் பெருமானே, படைத்தற் றொழில் இல்லாத தேவர்களை அசுரர் இட்ட சிறையினின்றும் மீட்டுக் காத்தருளிய கடவுளே, ஈகைப் பண்பு இல்லாத வஞ்சரிடம் இரத்தற்குச் சென்று இங்கு மங்குமாகப் பலகாலும் அலைந்து திரிந்து கீழ்மையுற்ற எனக்கு உன் திருவருள் எய்துமோ, அறிகிலேன், எ. று.

     உடைதல் - கெடுதல். உற்ற நோய் நோன்றல் தவமாதலின் அதனை யுடையாரை “உடையாத நன்னெஞ்சர்” என்று குறிக்கின்றார். துன்பம் சுடச்சுட அதனைத் தாங்கும் நல்லோர் மனம் சுடச் சுடரும் பொன் போல் ஒளி மிகுதல் பற்றி “நன்னெஞ்சர்” எனப் படுகின்றார். என்றுமாம். தவத்தின் விளைவு உண்மை ஞானப் பேறாதலின், “நன்னெஞ்சர்க்கு உண்மையைக் காண்பிக்கும் உத்தமன்” என்கின்றார். அறியாமையாகிய இருளைக் கடந்தவனாதலால் பிறர்க்கு உண்மையைக் காண்பிக்கும் தகவுடையன் என்பது விளங்க முருகனை “உத்தமன்” என்று புகழ்கிறார். உத்தமன் - இருளைக் கடந்தவன். படைப்புத் தொழிலுக்குரியவன் பிரம தேவனாதலால், அசுரர்க்குத் தோற்றுச் சிறைப்பட்ட தேவர்களை, “படையாத தேவர்” என்று கூறுகின்றார் மீட்ட தேவரை வாழ்வித்தருளிய நலத்தை விதந்து “சிறை மீட்டு அளித்தருள் பண்ணவனே” எனப் பரவுகின்றார். பண்ணவன் - கடவுள். ஈகைத் தன்மை யில்லாமையாலும், அஃது இருக்க வேண்டிய நெஞ்சின்கண் வஞ்சகம் நிறைந்திருப்பதாலும், “அடையாத வஞ்சகர்” என்று ஈயாத புல்லரை இகழ்ந்துரைக்கின்றார். அவர்களின் தன்மை யறியாமல் முன் சென்று இரந்ததும், வஞ்ச மொழிகளால் அலைத்து வருத்தியதும் தோன்ற “வஞ்சகர்பாற் சென்று இங்கு அலைந்தலைந்து” என்று கூறுகின்றார். வஞ்ச முண்மை அறிந்ததும், அலைந்ததும் மனப்பண்பைச் சீர் குலைத்துக் கீழ்மை நினைவுகட் கிடமாக்கியது பற்றி, “கடையான நாய்” என்று தம்மையே இழித்துரைக்கின்றார். தலையாய பண்புடையார்க்கு அருள் வழங்கும் பெருமானாகிய நின்னுடைய திருவருள் கடையனாகிய எனக்குக் கிடைக்குமோ என ஐயுறுகின்றேன் என்பார், “கடையான நாய்க்குன் கருணை யுண்டோ” என்று மொழிகின்றார்.

     இதனால், வஞ்சகர் பாற் சென்று இரத்தலைச் செய்து அலைந்து கடையனானது கூறி அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (68)