680. குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: சிறப்பு மிக்க திருவொற்றியூரை யுடைய பெருமானே, குற்றங்கள் எத்தனை வகை யுண்டோ அத்தனையும் குணம் என்று கொண்டருளும் உயர்குணங்கள் நிறைந்த கடல் போன்ற பரம்பொருள் என்று நான் நம்பி இங்கே வந்து உனது திருவருளையிரந்து நின்றேன்; நீரோ, வாயைத் திறந்து ஒரு சொல்லும் சொல்லாதிருக்கின்றீர்; உயர் நூல்களைக் கற்ற நல்ல தவமுடையார்க்கே அருள் செய்வீராயின், கடைப்பட்ட யான் யாவர் வீட்டு முன்றிலிற் சென்று நிற்பேன்; எனக்கென உற்ற நல்ல துணை உம்மையன்றிப் பிறரை அறியேனாதலால் அருள் கூர்ந்து பேசுக. எ.று.
மக்கட்கு நற்குணம் சில என்றால் துர்க்குணம் எண்ணிறந்தன என்பது உலக வழக்கு. இறைவனோ குணமல்லது குற்றமே யில்லாதவன். அதனோடு, மக்கள் செய்யும் குற்றங்கள் எத்தனை யுளவோ அவை யனைத்தையும் பொறுத்துக் குணமெனக் கருதி நலம் புரியும் நற்குணங்களே நிறைந்திருப்பது பற்றி, “குற்றம் அத்தனையும் குணம் எனக் கொள்ளும் குணக்கடல்” என்றும், இவ்வாறு சான்றோர் பலரும் சொல்லக்கேட்டு மனத்தின்கண் நம்பிக்கை கொண்டு உன் திருமுன் வந்துள்ளேன் என்பாராய், “நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால்” என்றும், என்பால் இரக்கமுற்று மனநோய் தீருமாறு ஒரு சொல்லேனும் வாய் திறந்து உரைத்தருளவேண்டும் என்பாராய், “வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” என்றும் உரைக்கின்றார். கற்றோரெல்லாம் நற்ற வராகார் என்பதுபற்றி, கல்வியும் தவமும் உடையாரே கொள்ளத் தக்கவரென்ற கருத்தால், “கற்ற நற்றவர்க்கே அருள் வீரேல்” என்றும், ஓரளவு கற்று நற்றவமே யில்லாமையால் கடைப்பட்டவன் அடியேன் என்றற்குக் “கடையேன்” என்றும், என்னை என் போன்ற கடையரும் ஏலார்; கற்ற நற்றவரும் தம்மினத்தவனல்லன் என்பது பற்றி தமது கடைத்தலை யணுகவிடார்; ஆகவே, எனக்குப் புகலிடமே யில்லை என்பாராய், “எந்தக் கடைத்தலைச் செல்கேன்” என்றும் உரைக்கின்றார். யாவரையேனும் துணை பற்றிச் சென்றால் பிறர் அருளவர் எனின், “உற்ற நற்றுணை உமையன்றி யறியேன்” என்று இயம்புகின்றார்.
இதன்கண், துணை பற்றிச் சென்றால், இறைவன்பால் அருள்மிக்க சொல் பெறலாம் எனின் உற்ற துணையாவாரும் உம்மையன்றிப் பிறர் இல்லை; என் செய்வேன் என்று முறையிடுகின்றார். (8)
|