682. தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஓயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: நற்றொண்டர்க்கு பெருகிய அளவில் அருள் செய்தற் பொருட்டுச் சீர் மிகும் திருவொற்றியூரை யுடையராகிய பெருமானே, தாயை இழந்தவர் போல மனம் தளர்வுற்றேன்; தந்தையாகிய உன் திருக்கோயில் திருமுன்பு வந்தேன்; வாயில்லாதவர் போல இருப்பதன்றி வாயைத் திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீரில்லை; என் நெஞ்சத்தையே கோயிலாகக் கொண்ட நற்பண்பு உடைய நீவீர் என் குறையை அறிய மாட்டீரோ! எ.று.
நற்பண்புடைய சிவத் தொண்டர்க்குப் பெருகிய அளவில் அருள் புரிதற்காகவே சிவபெருமான் திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருக்கின்றார் என்ற கருத்து விளங்க, “ஓயிலாது நல்தொண்டருக் கருள்வான் சீர் ஓங்கு ஒற்றியூர் உடையீர்” என்று உரைக்கின்றார். ஓய்தல் - சுருங்குதல். தாயை யிழந்தவர் தாயிலார் எனக் குறிக்கப்படுகின்றார். பிழை பொறுத்து அன்பு செய்வதில் தாய்க்கு நிகர் பிறர் இன்மையின் தாயை இழந்தவர் மனவலி குன்றிச் சோர்வுறுவர் என்பது பற்றி, “தாயிலா ரென நெஞ்சகம் தளர்ந்தேன்” என்று இயம்புகின்றார். எல்லார்க்கும் தந்தையாம் உறவினன் என்பதால் சிவனைத் “தந்தை” என்றும், அவன் முன்னின்று முறையிடுமாறு தோன்ற, “உம் திருச்சன்னிதி யடைந்தேன்” என்றும் உரைக்கின்றார். திருச்சன்னிதியில் தம்மை வரவேற்கும் குறிப்பொன்றும் புலப்படாமையால், சிவனை, “வாயிலாரென இருக்கின்றீர்” என்றும், “வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்” என்றும் கூறுகின்றார். உண்மையன்புடன் நினைப்பவர் உள்ளத்தையே கோயிலாகக் கொள்வது பற்றி, “கோயிலாக என் நெஞ்சமர்ந்த குணத்தினீர்” என்றும், அங்கிருக்கும் உமக்கு எனக்குள்ள குறை முற்றும் இனிது தெரியவேண்டும்; அற்றாக, ஒன்றும் அறியாதீர் போல வாய் மூடியிருப்பது நேரிதன்றென்பார், “என் குறை யறியீரோ” என்றும் கூறுகின்றார். “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” (கோயில்) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பதும் காண்க.
இதனால், நினைப்பவர் நெஞ்சைக் கோயிலாகக் கொண்டிருந்தும் குறையேலாதார் போல வாய் திறவாமலிருத்தல் கூடாது என்று முறையிட்டவாறு அறிக. (10)
|