684.

     தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
     ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
     ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
     தேன்றார்ச் சடையார்உன் சித்தம் இரங்காதோ.

உரை:

     கண்ணுக்குப் புலப்படாதிருந்தே துணை புரியும் சோதியுருவாகிய சிவபெருமானே, திருவடிக் கண்ணே அமைந்து பிணித்த அன்பினால் மனம் நெகிழ்ந்துருகேன்; ஆயினும், ஊன் போர்த்த உடம்பின் எலும்பாலாகிய மாலையணிந்த உன் செயலை நினைந்து நினைந்து உள்ளம் வாடுகின்றேன்; தேன் சொரியும் மலர் மாலை சூடிய சடையையுடையவனே, உன் திருவுள்ளம் என்பால் அருளி இரக்கம் கொள்ளாது போலும். எ.று.

     பொறி புலன்களுக்கு அறியவாராமல் அருவுருவாய் இருந்தே அடியார்க்கு அறிவு தந்து உதவுதல்பற்றித், “தோன்றாத் துணையாகும் சோதியே” என்று சொல்லுகின்றார். “தெய்வம் காட்டுமே யன்றி ஊட்டாது” என்ற உலகுரையும் சிவன் அறிவு தரும் ஞானச் சோதியாய் இலங்குவதை வற்புறுத்துவது காண்க. பிற பொருள்பால் செல்லாது சிவன் சேவடியையே யடைந்து ஒன்றுவது தோன்ற, “திருவடிக்கே ஆன்று” என்றும், அதனால் அன்பு தோன்றிப் பிணித்துக்கொண்டமை புலப்பட, “ஆர்த்த அன்போடு” என்றும், அன்புமிக்கு மனம் நீராய்க் கரைந்து உருகுவதன்றி உறைப்புண்டிருக்கின்றமை தோன்ற, “அகம் குழையேன்” என்றும் இசைக்கின்றார். மனம் குழையாதாயினும் தேவர் முதலியோர் அனைவரும் நிலையின்றி இறந்துபடினும், தான் இறவாது அவருடைய எலும்பை மாலையாகக் கோத்தணிந்த பெருமையைப் பன்முறையும் நினைந்து, கெடாவியல்புடைய பெருமான் அருள் பெற்று என்றும் பொன்றாத இன்பவாழ்வு பெற விரும்பி எளிதிற் கைகூடாமையால் வருந்தி வாடுகின்றேன் எனக் கூறுவாராய், “ஊன் தார்த் தரித்ததனை யுன்னியுன்னி வாடுகிறேன்” என்று உரைக்கின்றார். ஊன் என்றது ஈண்டு ஆகுபெயராய் ஊனுக்குட் பொதிந்த என்பின் மேற்று. நிலைபேறுடைய திருவடியை யுன்னி உறவு கொண்டடையாது, நிலையில்லாத ஊனுடம்பிலிருந்துகொண்டு துன்புறுகின்றோமே என நினைந்து நினைந்து ஏங்கி வாடுகின்றமையை எடுத்தோதித் துன்புறுமாறு சொல்லுதற்கு “உன்னி யுன்னி வாடுகின்றேன்” என்று உரைக்கின்றார். தேன் பொருந்திய மலர் மாலை யணிந்த சடையென்றற்குத் “தேன்றார்ச் சடை” என்று இசைக்கின்றார். என்னைக் கண்டருளித் திருவருளின்பம் நல்க வேண்டும் என்பாராய், “உன் சித்தம் இரங்காதோ” என்று உரையாடுகின்றார்.

     இதனால், நிலையில்லாத உடம்பிலிருந்து கொண்டு நிலைத்த அருள் வாழ்வு பெற விழைகின்றேன்; சித்தம் இரங்கி அருளுதல் வேண்டும் என்பதாம்.

     (2)