686. இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
கொலைவேட் டுழலும் கொடியே்னன் ஆயிடினும்
நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
உரை: இல்வாழ்வையே விரும்புகின்ற மகளிருடைய கீழான வின்பத்தை விரும்பி அதன்பொருட்டுக் கொலை செய்தலையும் நினைந்துழலும் கொடுமையுடையேனாயினும், நிலைபேறுடைய உனது திருவருளைப் பெறுவது நினைந்தே நெடிது நின்று வாடுகின்றேன்; ஒற்றைக் கலையுடைய பிறைத்திங்கள் விரும்பியுறையும் சடையை உடைய பெருமானே, சிறிதும் கருணை கொண்டிலையே, என் செய்வேன்? எ.று.
இலைவேட்ட மாதர், இல்வாழ்க்கையே வாழ்வென விரும்பியுறையும் மகளிர்; சமய நூல்கள் மகளிர்க்குத் துறவும் ஞானமும் நல்காது விலக்கியதே இதுகுறித்து என அறிக. இனி, இதற்கு இலை போன்ற வயிற்றையுடைய மகளிர் என்று பொருள் கூறுதலும் உண்டு. ஈன நலம், இவ்வுலகத் துன்ப வாழ்வினையே விளைவிக்கும் காமநலம். காம வேட்கை. வயப்பட்டார் தடையாக இடை நிற்பவரைக் கொல்லுதல் இயல்பாதலால், “கொலைவேட் டுழலும் கொடியனேன்” என்கின்றார். கொலை காம முதலியன கொடிய நெறியாதலின், தம்மைக் “கொடியனேன்” என்று குறிக்கின்றார். தானும் நிலைபெறாது, தன்னை யுடையாரையும் நிலை பெறுவியாது வீழ்க்கும் உலகியற்பொருள் போலாது, நிலைத்த இன்பமும் பயனும் வாழ்வும் தரும் நலம்பற்றி, “நிலைவேட்ட நின்னருள்” என்று சிறப்பிக்கின்றார். பெறலருமை பற்றி, “நின்று நின்று வாடுகின்றேன்” என்று உரைக்கின்றார். கலை, ஆகுபெயராய், ஒரு கலையே யுடைய பிறைத் திங்கட்காயிற்று. பிறைக்கிடம் சடையாதலின், “கலை வேட்ட வேணியனே” என்று கூறுகின்றார்.
இதன்கண், சிவபெருமான் அருள் வேண்டி வாடும் வாட்டம் உரைத்து அதனை நல்குக என முறையிடுமாறு அறிக. (4)
|