687.

     கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
     தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
     எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
     தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.

உரை:

     கரிய மேகத்தின் நிறமுடைய திருமாலும் கணக்கிட்டறிய மாட்டாத நினது திருவடிக்கு செய்யத்தக்க தொண்டு இதுவென அறிந்து செய்யாத துட்டன் யான்; ஆயினும், எண்ணத்தக்க நின் திருவருளை யெண்ணி யெண்ணிப் பெறாது வாட்டம் மிகுகின்றேன்; சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பெருமானே, சிறிதும் நீ அருள் செய்யும் நெறியை மேற்கொள்கின்றாய் இல்லையே. எ.று.

     தண்ணிய நீர்மையால் மரஞ்செடிகள் தழைத்துக் குளிர்ச்சி மிக்குள்ளமை பற்ற வளவிய சோலைகள் தண்டலை என்று கூறப்படுகின்றன. இத் தண்டலைகள் மிக்க இடம் என்பதுகொண்டு திருவொற்றியூரைத் “தண்டலை சூழ் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார். கரிய முகிலின் நிறமுடைமை பற்றித் திருமாலைக் “கொண்டல் நிறத்தோன்” என்று குறிக்கின்றார். குணித்தல், கணக்கிட்டறிதல். இறைவன் திருவடிக்குச் செய்தற்கெனத் தொண்டுவகை பலவுண்டு; அவற்றை ஆராய்ந்து தக்கது தேர்ந்து செய்வது முறையாதலின், அது செய்யாததுபற்றித் தம்மைத் “தொண்டறிந்து செய்யாத துட்டனேன்” என்று கூறுகின்றார். துட்டன் - ஆகாதன செய்யும் குற்றமுடையோன். செயல் வகையில் துட்டனே னாயிடினும், நினைவின்கண் திருவருளையே நினைப்பதும் வேண்டுவதும் செய்து மாட்டாமையாலும் பெறாமையாலும் வருந்துகின்ற திறத்தை “எண்தக நின் பொன்னருளை யெண்ணி யெண்ணி வாடுகின்றேன்” எனவுரைக்கின்றார். எண்ணற்குத் தகுதி வாய்ந்தமையின் திருவருளை, “எண்தக நின் பொன்னருள்” என்கின்றார். அருமை புலப்படுத்தற்குப் பொன்னருள் எனப்படுகிறது. தயவு, அருள்.

     இதன்கண், பொன் போன்ற நின் திருவருளை நல்குவதற்கு அருள் செய்யும் திறத்தில் நின் திருவுள்ளத்தைச் செலுத்துக என்று முறையிட்டவாறு.

     (5)