688. சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் உத்தமனாகிய பெருமானே, அரசே, சார்தற்காகாத பயனில்லாதார் சார்பை யடைந்து, உன்னுடைய மெல்லிய மலர் போன்ற திருவடியை வணங்கி வழிபடேனாயினும், உன்னுடைய திருமுன்பு நேராய் வந்து நெடிது நின்று மனம் வாடுகின்றேன்; எனது வாட்டத்தைச் சிறிதேனும் ஓர்ந்து அருள் செய்க. எ.று.
சாரா வறுஞ்சார்பு - சார்தற்காகாது உயர் பண்பும் செய்கையு மில்லாதார் சூழல். சாராச் சார்பு எனினும் அமையுமாயினும், சார்ந்த வழிப் பயன் சிறிதுமில்லதென வற்புறுத்தற்கு “வறுஞ் சார்பு” என்று குறிக்கின்றார். வறுஞ் சார்பைச் சார்ந்ததனால் பயனில் வாழ்வுற்றுக் கெட்டேன்; அக் கேடு உன் மலரடியை வணங்கி வாழ்த்தும் நற்பேற்றினை நல்காதாயிற் றென்பார், “உன்னுடைய தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன்” என வுரைக்கின்றார். ஒழுங்கமைந்த திருவடி “தாரார் அடி” எனப்பட்டது. இனி, மாலைக்கமைந்த மலர் போலும் திருவடி என்றலுமொன்று. சார்பு வறுஞ் சார்பாயினும் உன் திருவருட் பெருமையை நினையாது மறக்கச் செய்ததில்லை என்பது விளங்க, “ஆயிடினும்” என்றும், அருட்பேற்றில் வேட்கை மீதூர்ந்து உன் திரு முன் வந்து நெடிது நின்று இறைஞ்சும் செயலுடையேனாயினேன்; எனது வேட்கையைத் திருவுள்ளத்தில் எண்ணியருள் என்பாராய், “நேராய் நின் சன்னிதிக்கண் நின்று நின்று வாடுகின்றேன் ஓராய்” என்றும் முறையிடுகின்றார்.
இதன்கண், வறுஞ்சார்பில் கிடந்தொழியினும் அருள்வேட்கை மீதூர்ந்து நின் திருமுன் நேராய் நின்று வாடுகின்றேன், அருள் புரிக, என்று வேண்டிக் கொண்டவாறாம். (6)
|