689. ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
உரை: அழகு மிக்க திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப் பெருமானே, ஊர்மக்கள் மதிப்பரென்றெண்ணி வீணாக வாயில் வந்தது கூறுகின்றதன்றி நினது புகழ்க்குத்தக நின்னுடைய திருவடியைத் தெளிந்து போற்றுவதில்லேன்; ஆயினும் கரிய நஞ்சுண்ட கழுத்தை யுடையோனே, நின்னையே நினைந்து நெஞ்சால் வழிபடுகின்றேன்; எந்தையே, எனக்கு அருள் செய்வாயாக. எ.று.
ஏர் - அழகு; உயர்வுமாம். திருவொற்றியூர்ப் பெருமானைத் தியாகர் என்றும் வழங்குவது பற்றித் தியாகப்பெருமானே என உரை கூறிற்று. ஊரிலுள்ளோர் கண்டு இவருடைய சிவபத்தியின் பெருக்கு என்னே என வியக்குமாறு வாயில் வந்தவாறெல்லாம் பேசுகின்ற செயலை, “ஊர் மதிக்க வீணின் உளறுகின்றது” என உரைக்கின்றார். உளறுதல், சொல்லும் பொருளும் அறிவுக்கு இயைபில்லாதவாறு பேசுதல், இறைவன் புகழ்க்குரிய நன்மதிப்பு. நாடறிய விளங்க எடுத்து அப் பெருமான் திருவடிக்கே அமையுமாறு சொல்லித் துதிக்கும் செய்கையை. “நின் சீர்மதிக்க நின்னடியைத் தேர்ந்து” என்றும், அதனைச் செவ்வே செய்யா தொழிந்தமையை “ஏத்தேன்” என்றும் இயம்புகின்றார். தேவர் முதலாயினார் உய்தல் வேண்டி அவர்களின் உயிர் குடிக்க வந்த நஞ்சினைத் தான் குடித்து அருள் புரிந்த திறத்தைக் “கார்மதிக்க நஞ்ச முண்டகண்ட” என்றும், அதை நினைக்கும் உள்ளம் அத்தகைய அருளைச் சிவன்பால் பெறவேண்டுமென வேட்கையுறுதலால் “கண்டம் நினைந்து உள்குகின்றேன்” என்றும், அடியேற்கு உனது தண்ணருளை நல்குக என்பாராய், “எந்தை அளி எய்தாயோ” என்றும் முறையிடுகின்றார். அளி எய்துதல் - அருள் புரிதற்குரிய மனக்குழைவு பெறுதல்.
இதன்கண், திருவடியை ஏத்தும் செம்மையறிவு இல்லையாயினும் நஞ்சுண்ட கண்டத்தை நினைந்து அதனால் உலகு பெற்ற அருளை யுன்னி எனக்கும் அருளவேண்டும் என்று வேண்டியவாறாம். (7)
|