69. பண்ணவனே நின் பதமல ரேத்தும்
பயனுடையோர்
கண்ணவனே தணிகா சலனே யயிற்
கையவனே
விண்ணவ ரேத்திய மேலவனே மயல்
மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தா யென்னே
யுன்றன் பொன்னருளே.
உரை: தணிகை மலையையுடைய பெருமானே, வேற்படையையேந்தும் கையை யுடையவனே, தேவர்கள் போற்றுகின்ற மேலோனே, பெருவலி படைத்தவனே, உன்னுடைய திருவடித் தாமரையை வழிபடும் நல்வினைப் பயனை யுடையவர்க்குக் கண்ணாய் விளங்குபவனே, மயக்கம் பொருந்திய மனம் புண்ணுற்றிருக்கும் எளியேன் உள்ளத்திலும் எழுந்தருளுகிறாயெனின், உன்னுடைய அழகிய அருட் செயலை என்னென்பேன், எ. று.
பண்ணவன் - வலி மிக்கவன். முன்னைச் செய்த நல்வினைப் பயனுடையார்க்கே முருகப் பெருமான் திருவடியை வழிபட்டுப் பரவும் பேறு எய்துதலால் அவர்களைப் “பதமலர் ஏத்தும் பயனுடையோர்” என்றும், அப்பெருமக்கட்கு ஞானப் பொருளாய் நற்காட்சி வழங்கி யருளுபவனாதலால், “பயனுடையோர் கண்ணவனே” என்றும் இயம்புகின்றார். “நல்வினைப் பயன் நான்மறையின் பொருள், கல்வியாய கருத்தன்” மழபாடி என ஞானசம்பந்தர் உரைப்பர். விண்ணகத் தேவர் பரவும் மேன்மையுடையவன் என்பார், “விண்ணவர் ஏத்திய மேலவன்” என்று புகழ்கின்றார். மனத்தின்கண் திண்மையும் தெளிவுமுடையார்க்குக் கண்ணாய் நின்றருளும் பெருமானாகிய நீ, மையல் மானிட வாழ்வால் புண்ணுற்று வருந்தும் எளியேன் உள்ளத்தும் எழுந்தருளுவது பேரருள் என்பார், “மயல்மேவு மனம் புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன்னருளே” என்று உரைக்கின்றார்.
இதனால், முருகப் பெருமான் தமது உள்ளத்தும் காட்சி தருவதை வியந்து பரவியவாறாம். (69)
|