692.

     பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
     சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆடியினும்
     நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
     வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.

உரை:

     பாசவொழுக்கத்தார் காணாத வளரும் திருவொற்றியூரில் இருக்கின்ற பெரிய அமுது போன்ற பெருமானே, உலக நடையாகிய காட்டில் விரும்பிக் கிடந்து வருந்துவதன்றி உன்னுடைய சீர்த்த ஒழுக்கமாகிய நல்வழியைச் சேர்ந்திலேன்; ஆனாலும் நேரிய நடை மண்டபத்தையுடைய நின்னுடைய கோயில் திருமுன் நெடிது நின்று வாட்டம் உறுகின்றேன்; அருள் புரிக. எ.று.

     வார் நடை - பாச வொழுக்கம்; காம வெகுளி மயக்கங்களை மிகுவிக்கும் தீயொழுக்கம் இவ்வாறு கூறப்படுகிறது. உலகியல் நடையில் தோய்ந்து உண்டுடுத்து உறங்கும் நெறியில் வாழ்நாளைக் கழித்து அவற்றிடை எய்தும் துன்பங்களை நுகர்ந்த திறத்தைப் “பார்நடையாம் கானில் பரிந்துழல்வது” என்று கூறுகின்றார். சிவஞானச் செந்நெறியைச் “சீர்நடையாம் நன்னெறி” என்றும், அதனை மேற்கொள்ளாது புறக்கணித்த நிலையை, “நன்னெறியிற் சேர்ந்திலேன்” என்றும் புகல்கின்றார். ஞானமும் ஒழுக்கமும் பெறேனாயினும் திருக்கோயில் வழிபாட்டிற் குறையின்றி நாடோறும் கோயில் திருமுன்னர்ப் பல் பொழுது நின்று அருள் நினைந்து வாடி வருந்தினேன் என்பாராய். “ஆயிடினும் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்” என இறைஞ்சி யுரைக்கின்றார். நேரிய நடைமண்டபம், நேர் நடை எனப்படுகிறது. தோரண வாயிற்கும் மகா மண்டப முகப்புக்கும் இடைவெளி “நடை” எனப்படும்.

     இதன்கண், சிவஞானமும் சைவ வொழுக்கமும் கொண்டிலேனாயினும், திருக்கோயில் வழிபாடு செய்வ தொழியேனாதலின் அருள் செய்க என்பதாம்.

     (10)