694. உய்யஒன் றறியா ஒதியனேன் பிழையை
உன்திரு உள்ளத்தில் கொண்டே
வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த
தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே
வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
உரை: சிவந்த நெடிய இலை பொருந்திய வேலை யேந்தும் முருக வேளைப் பெற்ற தெய்வமே, ஆனந்தத்தின் திரட்சியே, இருளற்ற உள்ளத்தால் உயர்ந்தவர் மனத்தின்கண் விளக்கம் செய்யும் விளக்குப் போல்பவனே, வளம் பலவுமுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் மணியே, உலகிற் பிறந்த யான் உய்தி பெறுவதற்கான ஒன்றும் அறிந்து கொள்ளாமல் ஒதி மரம் போன்று உள்ளேன்; என் பிழையை நீ உன் திருவுள்ளத்தில் பதியக்கொண்டு கொடியனெனக் கருதிக் கைவிடுவாயேல் சிவனே, வேறே யான் செய்ய வல்லது ஒன்றுமில்லை, காண். எ.று.
இப் பத்தின்கண் பாட்டுத் தோறும் சிவபெருமான் முருகப் பெருமானைப் பெற்றளித்த பெருநலத்தை வியந்து பாராட்டிப் பரவுகின்றாராதலின், இப் பாட்டில், முருகனைச் “செய்ய நெட்டிலைவேற் சேய்” என்றும், அவனைத் தந்தருளிய சிவனை, “சேய்தனை யளித்த தெய்வமே” என்றும் உரைக்கின்றார். நெட்டிலை வேல் - நீண்ட இலை பொருந்திய வேற்படை. நெடுமையை வேலொடு கூட்டி நெடுவேல் எனவும், இலை வேல் எனவும் இயைத்துக் கொள்க. சேய், செம்மை நிறமுடைமை பற்றி முருகற்குச் “சேய்” என்பது பெயர். சிவனுடைய விழி பயந்தமை கொண்டு, “சேய்தனை யளித்த தெய்வமே” என்கின்றார். குண தத்துவம் கடந்த பரசிவமாதலின் நீங்காமை தோன்ற, குணவடிவில் நிறுத்தி “ஆனந்த திரட்டே” என வுரைக்கின்றார். மலவிருளை மையல்” என்று குறித்து ஞானத்தால் சிவவொளி திகழும் திருவுள்ளம் கொண்ட சான்றோர்களை, “மையலற்றவர்” எனச் சிறப்பித்து, அவருள்ளத்தே நின்றொளிரும் சிவபரஞ்சுடரை, “மனத் தொளிர் விளக்கே” என்று புகழ்கின்றார். மணி - மாணிக்க மணி.
இதன்கண், உய்யும் நெறியை நாடுதலின்றி நிலவும் தமது பிழையைத் திருவுள்ளத்தே கொள்ளாமல் பொருத்தருள வேண்டுமென ஒற்றித் தியாகப் பெருமானிடம் விண்ணப்பித்தவாறு. (2)
|