695.

     கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக்
          கருதிடாப் பிழைதனைக் குறித்தே
     விழலன்என் றையோ கைவிடில் சிவனே
          வேறுநான் யாதுசெய் வேனே
     அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற
          அப்பனே அயனுமால் அறியாத்
     தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித்
          தனிநகர் அமர்ந்தருள் தகையே.

உரை:

     ஒற்றி நகர்க்கண் எழுந்தருளும் தகையே, நெருப்பை யுமிழும் வேலைக் கையிலிலேந்தும் ஐயனாகிய முருகப் பெருமானை ஈன்றளித்த அப்பனே, பிரமனும் திருமாலும் அறியாத நெருப்பின் நிறத்தையுடைய பவளக் குன்றம் போல்பவனே, கழலணிந்த உன் அரிய திருவடித் தாமரையை நெஞ்சின் நினையாதொழிந்த என் குற்றத்தைககருத்தில் ஏற்று, இவன் விழலன் என்று வெறுத்து என்னைக் கைவிடு வாயேல், ஐயோ, சிவனே, வேறே நான் என்ன செய்ய வல்லேன், எ.று.

     முருகனுக்குரியது வேற்படையாதலின், அதனை யேந்தும் அப் பெருமானை, “அழல் அயில்கரத்து எம் ஐயன்” என்று சிறப்பிக்கின்றார். அயில், வேலுக்கு ஒரு பெயர். தீயைக் கக்கும் வேற்படை என்றற்கு “அழலயில்” என்று கூறுகின்றார். முருகனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு காட்டற்கு “எம் ஐயன்” என்றுரைக்கின்றார். முருகனுக்குத் தந்தையாம் முறைமை பற்றி “ஐயனை யீன்ற அப்பன்” எனக் குறிக்கின்றார். முருகன் எங்கட்குத் தலைவனாம் ஐயன். அவனுக்கும் எங்கட்கும் சிவன் அப்பன் என்றவாறுமாம். சிவனை நிறம் பற்றிப் பவளக்குன்ற மென்று கூறும் வள்ளற் பெருமான், பவளத்தின்பால் இல்லாத வெம்மையும் ஒளிமிகுதியும் சிவன்பால் உண்மை தோன்ற “தழனிறப் பவளக் குன்றமே” எனச் சாற்றுகின்றார். பவளக் குன்றமாம் சிறப்பு முருகனுக்கும் இயையாவாறு வெளிப்படுத்தற்கு “அயனுமால் அறியாப் பவளக் குன்றம்” என்று கூறுகின்றார். நலம் அனைத்தும் திரண்ட உருவாதலால் “தகையே” என்கின்றார். சிவபெருமான் ஆன்மாக்களைப் பிணித்து நிற்கும் வினைகளைக் கழற்றும் திறத்தன வாதலால், “கழல் கொள் திருவடி” என்று காட்டுகின்றார். “கழலாவினைகள் கழற்றுவ காலவனம் கடந்த அழலார் ஒளியன காண் ஐயாறன் அடித்தலமே” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் சிறப்பித்துரைப்பது கண்டறிக. வினை நீங்கினாலன்றி ஞானம் விளங்காமையின், வினையறுக்கும் கழலணிந்த திருவடியை நினையாதொழிவது நினைவு பெற்ற மக்கட்குப் பெருங் குற்றமாதல் பற்றி, “கழல் கொள் உன் திருவடி மலரைக் கருதிடாப் பிழை” என்று கட்டுரைக்கின்றார். கழல் அணிந்தமையால் வன்மையுற்ற தாயினும், அன்பால் நினைவார் உள்ளத்தில் நினைந்த மாத்திரையே விரைந்தேகி ஒளி நல்கும் அருமை யுடைமையால் “அருமைத் திருவடி மலர்” என்று தெரிவிக்கின்றார். சிறுமையுடைய என் பிழையைப் பெருமை சான்ற நீ மனம் கொள்ளலாகாது; கொண்டு என் பயனின்மையை எண்ணி விழலன் என்று கைவிடுவாயோ என்று அஞ்சுமாறு தோன்ற, “விழலன் என்று ஐயோ கைவிடில்” என்று உரைக்கின்றார். விரிந்த நீர்நிலைகளான ஏரிகளில் முளைத்திருக்கும் புல் வகை விழல்; அது பயனில்லதென்றற்கு “விழலுக் கிறைத்த நீர் போல்” எனத் தொண்டை நாட்டுப் பழமொழி யொன்று வழங்குகிறது. சிவனது திருவருளையின்றி மக்களுயிர் யாதும் செய்ய மாட்டாமையின், “வேறு நான் யாது செய்வேனே” என விளம்புகின்றார்.

     இதன்கண், சிவபிரான் திருவடியை நினையாத பிழையைப் பொறுத்துத் தம்மைக் கைவிடாதருளுக என வள்ளற்பெருமான் விண்ணப்பித்தவாறு.

     (3)