698.

     அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை
          ஐயநின் திருவுளத் தெண்ணி
     வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே
          வேறு நான் யாதுசெய் வேனே
     கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக்
          களத்திருத் தியஅருட் கடலே
     சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன்
          தந்தையே ஒற்றிஎம் தவமே.

உரை:

     பிரமனும் திருமாலும் பிறரும் உயிருடன் நெடிது வாழ்தல் வேண்டிக் கடல் விடத்தைக் கழுத்தில் இருத்திக் கொண்ட அருட் கடலே, வினைத் திரளை எஞ்சாமல் கெடுக்கும் அறுமுகப் பெருமானுக்குத் தந்தையே, ஒற்றிநகர்க்கண் எழுந்தருளும் தவப் பயனே, திருவைந் தெழுத்தை முறைப்பட ஓதி உய்தி நாடாத என் பிழையை நின் திருவுள்ளத்திற்கொண்டு கொடியனென்று என்னைக் கருதிக் கைவிடுவாயேல், சிவனே, யான் வேறு ஒன்றும் செய்தற் கில்லேன். எ.று.

     பிரமன், திருமால் முதலிய தேவர்கள் சாதற் கஞ்சி அமுது வேண்டிக் கடல் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவர்கள் பொருட்டுச் சிவபெருமான் அதனையுண்டு கழுத்திலேயே நிறுத்திக்கொண்ட அருட் செயலை வியந்து, “கஞ்சன் மால் முதலோர் உயிர் பெற விடத்தைக் களத்திருத்திய அருட்கடலே” என்று கூறுகின்றார். கஞ்சம் - தாமரை; தாமரையிலிருத்தலின் பிரமன் “கஞ்சன்” எனப்படுகின்றான். அமுதுண்டால் நெடிது உயிர் வாழலாம் என்று கருதியது பற்றி, “உயிர் பெற” என்றும், கடல் விடத்தை உண்டு விழுங்கி யொழியாது அதன் ஆற்றலின்மையும் சிவனது பெருந் தன்மையும் உலகறிந்துய்தி பெற வேண்டிக் கழுத்திடத்தே நிறுத்திக் கொண்ட அருட் குறிப்புப் பற்றியே “விடத்தைக் களத்திருத்திய அருட்கடலே” என்றும் இசைக்கின்றார். நுகர்வதும் நுகர்ந்ததும் எதிர்வில் நுகரவிருப்பதுமாகிய வினைத் திரளை யொழிக்கும் போது, நுகரவிருக்கும் சஞ்சித வினையும் அறக் கெடுமாறு போக்கும் இயல்பு பற்றி அறுமுகக் கடவுளைச் “சஞ்சித மறுக்கும் சண்முக முடையோன்” என்று பரவுகின்றார். இறைவன் தாள் பரவுவார்க்கு இருவினையும் சேராமற் கெடும் என்பதாயினும், நுகர்ந்தன போக மேல் நுகரவிருப்பன என்னாம் என்பார்க்கு அவையும் அறவே கெடும் என்று விளக்குதற்குச் “சஞ்சிதம் அறுக்கும் சண்முகம் உடையோன்” என்று உரைக்கின்றார். தவம் செய்பவர்க்குத் தவமாயும், தவ முதலாயும், தவப்பயனாயும் இருத்தலின் ஒற்றியூர்ப் பெருமானைத் “தவமே” என்று சிறப்பிக்கின்றார். சைவத் தனிநூல்கள் சிவஞானம் பெற்ற செல்வர்க்கு உய்தி தரும் பொருளாக அருளுவது திருவைந் தெழுத்து; அவற்றை முறைப்பட ஓதி உய்தி பெறுவது சைவனுக்குக் கடன்; அதனைச் செய்யாதொழியும் பிழையை, “அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை” எனவும், அப்பிழையைப் பொறாமல் மனத்தே கொண்டு வெறுத்து நீக்கினால் பிழை செய்யும் என் போலியர்க்கு உய்தியில்லை என்பாராய, “ஐயநின் திருவுளத் தெண்ணிக் கைவிடில் சிவனே யான் வேறு யாது செய்வேன்” எனவும் வள்ளலார் உரைக்கின்றார். வெஞ்சன் - கொடுமைப் பொருளதாகிய வெம்மை யென்னும் சொல்லினின்றும் தோன்றிய திரிசொல். கைவிடின் வரும் ஏதத்துக்கு அஞ்சி “ஐயோ” என்றும், செயலற்றொழிவதை யெண்ணிச் “சிவனே” யென்றும் தெரிவிக்கின்றார்.

     இதன்கண், திருவைந்தெழுத்தை ஓதி உய்தி பெறாப் பிழையைப் பொறுத்தருள வேண்டி விண்ணப்பித்தவாறு.

     (6)