7. நிலையுறு நிராசையா முயர்குலப் பெண்டிரொடு
நிகழ் சாந்தமாம் புதல்வனும்
நெறிபெறு முதாரகுண மென்னுநற் பொருளுமருள்
நீக்கு மறிவாம் துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனமெனும் நல்லே வலும்
வருசகல கேவல மிலாத விடமும் பெற்று
வாழ்கின்ற வாழ் வருளுவாய்
அலையிலாச் சிவஞான வாரியே யானந்த
அமுதமே குமுத மலர் வாய்
அணிகொள் பொற்கொடி பசுங்கொடி யிருபுறம் படர்ந்
தழகுபெற வருபொன் மலையே
தலைவர்புகழ் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தலைவராயினார் புகழும் சென்னையிற் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, தண்முக முடைய தூயமணி போல்பவருள் சைவமணியாகும் சண்முகத் தெய்வ மணியே, அலையில்லாத சிவஞானக் கடலே, ஆனந்தத்தை நல்கும் அமுத மானவனே, குமுத மலர் போன்ற வாயையுடைய அழகு பொருந்திய பொற் கொடியும் பசுமை நிறமுடைய கொடியும் வலமிடமாகிய இருபுறத்தும் படர்ந்து அழகு திகழ வரும் பொன்மலை போன்ற பெருமானே, நிலைத்த ஆசையில்லாமை யென்னும் உயர்குல மங்கையுடன் நிலவுகின்ற சாந்த மென்னும் மகனும், நன்னெறியாகிய உதாரகுணம் என்ற நற்பொருளும், மயக்கத்தைப் போக்கும் நல்லறி வென்னும் துணைவனும், மலைதல் இல்லாத நிராங்காரம் என்னும் நண்பனும், தூய்மை யுற்ற மனமென்னும் நல் ஏவலாளனும், சகல கேவலமென வரும் அவத்தை யில்லாத சுத்தநிலைய மாகிய இடமும் கொண்டு வாழ்கின்ற சிவபோக வாழ்வை அருளுவாயாக. எ. று.
முருகப் பெருமானைச் சிவஞானக் கடல் என்பவர், ‘சிவஞான வாரியே’ என மொழிகின்றார். கடல் காற்றால் அலைப்புண்டு மலை போன்ற அலைகளால் அலமரும் சிறுமை யுடையதாகலின், அதனை விலக்கற்கு “அலையிலாச் சிவஞான வாரியே” என்று கூறுகின்றார். அமுதம் தன்னையுண்டார் உயிரை உடம்பின்கண் நெடிது வாழச் செய்யும் இயல்பிற்றென்பர்; முருகனாகிய அருளமுதம், நிலைத்த உயிர் வாழ்க்கையே யன்றிக் குறையாத ஆனந்தத்தையே நுகர்விப்பது என்பது தோன்ற, “ஆனந்த அமுதமே” என அறிவிக்கின்றார். முருகப் பெருமானுடைய தேவியர்களாகிய தெய்வயானையும் வள்ளி நாயகியும் கொடி போன்ற உருவினராயினும் நிறத்தால் முறையே பொன்மையும் பசுமையும் பொருந்திய ஆம்பல் மலர் போலும் வாயை யுடையவராதல் விளங்க, “குமுத மலர் வாய் அணிக்கொள் பொற்கொடி பசுங்கொடி” எனவும், அவர்க்கு வலப்புறத்தில் வள்ளியும் இடப்புறத்தில் தெய்வயானையும் விளங்க நடுவே செம்மேனி யம்மானாய் முருகப் பெருமான் வீற்றிருப்பது விளங்க, “பொற் கொடி பசுங்கொடி இருபுறம் படர்ந்து அழகு பெற வரு பொன் மலையே” எனவும் இயம்புகின்றார். குணம் செயல்களால் தலைமை மேவினாரைத் தலைவர் எனச் சிறப்பிக்கின்றார். ஆசை நிலையுதலின்றிக் கெடுவது பற்றி நிராசையை “நிலையுறு நிராசை” என்றும், கொண்டானை நீங்குதலின்றி ஒன்றி யிருக்கும் பண்பு பற்றி, “நிராசையாம் உயர்குலப் பெண்டிர்” என்றும் உருவகம் செய்கின்றார். நிராசையின் பயன் சாந்தமாதலால், “நிகழ் சாந்தமாம் புதல்வன்” எனக் கூறுகின்றார். உதார குணம், பிறர்க்கு உதவும் பண்பு. இது உதாரதை எனவும் வழங்கும்; “ஊணிலான் செய்யும் உதாரதை” (சிறுபஞ்ச. 12) எனச் சான்றோர் உரைப்பது காண்க. பொருளுடையான்பால் இருந்து மேம்படுதலின், உதார குணத்தைப் பொருளாக்கி, “உதாரகுணம் என்னும் நற்பொருள்” என்று நவில்கின்றார். கொடுப்பார்க்குப் புகழும் பெறுவார்க்கு நலமும் விளைத்தலின் “நற்பொருள்” எனச் சிறப்பிக்கின்றார். மயக்கமும் கலக்கமும் போக்கித் தெளிவு நல்குவது அறிவின் செயலாதலால் “மருள் நீக்கும் அறிவாம் துணைவன்” என்று உரைக்கின்றார். ஆங்காரம் தன்முனைப் பாதலின், அடக்க வியல்பை, “நிராங்காரம்” என்று குறித்து மனத்தினும் புலங்களினும் நின்று குற்ற மெய்தாவாறு காப்பது பற்றி, “நிராங்கார நண்பன்” என்று புகழ்கின்றார். ஒருவரையொருவர், பொறாது பூசலிடல் மலைவாதலால் அதனை விளைவிக்கும் ஆங்காரத்தை விலக்குதற்கு “மலைவறு நிராங்காரம்” என்று விளக்குகின்றார். அறிவின் வழி நின்றியலும் மனம் தூயதாயின், நன்னினைவும் நன்மொழியும் நற்செயலும் நிகழ்தலால், “சுத்தமுறு மனமென்னும் நல்லேவலும்” என உரைக்கின்றார். உயர்குல மனைவியும், ஒள்ளிய புதல்வனும், அறிவுடைய துணைவனும், இனிய நண்பனும், ஏவலாளனும் வாய்த்தாலும் உறையுமிடம் சுத்தமாக இருத்தல் வேண்டுமாதலால், “சகல கேவல மிலாத இடம்” என்று புகல்கின்றார். ஆணவமல மொன்றே கொண்டு உடம்பொடு கூடாமல் அறிவு செயலற்றிருக்கும் நிலை கேவலம்; மலங்கலந்த உயிரறிவுடன் உடம்பொடு கூடி யுலகில் உறும் நிலை சகலம்; மலமறைப்பும் உடல் உலகுகளின் தொடர்பும் அறவே நீங்கிச் சிவனடிக்கீழ் இனிதிருக்கும் நிலை சுத்தம்; அந்த இருப்பைத்தான், வடலூர் வள்ளல் “சகல கேவலம் இலாத இடம் பெற்று வாழ்கின்ற வாழ்வு” என்றும், அதனை அருளுக என்றும் வேண்டுகின்றார்
இதனால், கேவல சகல அவத்தை யுறாமல் சுத்தாவத்தை யுற்றுச் சிவபோகப் பெருவாழ்வு நல்குமாறு முருகப் பெருமானை வேண்டியவாறாம். (7)
|