70.

    பொன்னார் புயத்தனும் பூவுடை யோனும்
        புகழ் மணியே
    என்னாவி யின்றுணையே தணிகாசலத்
        தேயமர்ந்த
    மன்னா நின் பொன்னடி வாழ்த்தாது
        வீணில் வருந்துறுவேன்
    இன்னா வியற்று மியமன் வந்தாலவற்
        கென் சொல்வனே.

உரை:

     திருத்தணிகை மலையில் எழுந்தருளும் மன்னனே, திருமகள் வீற்றிருக்கும் தோளையுடைய திருமாலும் தாமரைப் பூவை யிடமாக வுடைய பிரமனும் போற்றும் புகழ் பொருந்திய மாணிக்க மணியே, எனக்குயிர்த் துணையாகியவனே, நின்னுடைய திருவடியை வணங்கி வாழ்த்தாமல் வீணே வருந்துகின்றே னாதலால், நோய் செய்து உயிர் கவரும் கூற்றுவன் வந்தால் அவனுக்கு யான் யாது சொல்வேன், எ. று.

     தணிகை மலையில் நிலைப் பொருளாக வீற்றிருப்பது பற்றி, “தணிகா சலத்தே யமர்ந்த மன்னா” என்று கூறுகிறார். பொன் - திருமகள்; ஈண்டுப் புயத்தில் அமரும் வீரத் திருமகள் மேற்று. மாணிக்கமணி போல்வது பற்றி முருகனை, “மணியே” என்று சிறப்பிக்கின்றார். உயிர்க்குயிராய் அறிவருளும் மாண்பு பற்றி ஆவித் துணை யென்னாது, “என்னாவி இன் துணை” என இயம்புகிறார். பொன்னடி - அழகிய திருவடி. திருவடி வாழ்த்தாமை துன்பத்துக் கேதுவாதலால், “நின் பொன்னடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்” என வுரைக்கின்றார். வருந்துறுதல் - வருந்துதல் உறுதல். வருந்து, முதனிலைத் தொழிற்பெயர். உடலின் கண் இனிதிருக்கும் உயிரை நோய் செய்து கைப்பற்றுவது இயமன் செயலாதலால், “இன்னா இயற்றும் இயமன்” என மொழிகின்றார். இயமன் வந்தால் “யான் முருகன் தமர்” என்று சொல்லும் வாய்ப்பு இல்லை என்பார், அவற்கு “என் சொல்வன்” என்று சொல்லுகிறார். “பட்டிக் கடாவில் வரும் அந்தகா வுனைப் பாரறிய, வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரனைப் போய், முட்டிப் பொருத செவ்வேற் பெருமான் திருமுன்பு நின்றேன், கட்டிப் புறப்படடா சத்திவா ளென்றன் கையதுவே” (கந்தரலங். 64) என்று அருணகிரியார் இயமனுக்குச் சொல்வது காண்க.

     இதனால், முருகன் திருவடியை வாழ்த்தாமல் வீணாய தெண்ணி இயமன் வந்தால் என் சொல்வேன் என இரங்கியவாறாம்.

     (70)