700.

     சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல்
          துன்பசா கரந்தனில் அழுந்தி
     வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே
          வேறுநான் யாதுசெய் வேனே
     வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே
          வள்ளலே மழவிடை யவனே
     போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த
          பூரணா ஒற்றியூர்ப் பொருளே.

உரை:

     ஞான நெறியில் வாழ்ந்த மாதவச் செல்வர்கள் மனத்தின் கண் ஒளிரும் ஒளிப்பொருளே, வள்ளலே, இளமை மாறாத எருதை யூர்தியாக வுடையவனே, பகையைப் பிளந்த வேற்படையைக் கையில் ஏந்தும் புனிதனாகிய முருகப் பெருமானை ஈன்றளித்த பூரணனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபரம்பொருளே, முன்பெல்லாம்வஞ்சமே நினைக்கும் மனமுடையேனாதலால் என்னிடத் துண்டான பிழைகளை நின் திருவுள்ளத்துக் கொள்ளற்க; பிழைகளால் நான் துன்பக் கடலில் வீழ்ந்து அழுந்தியுள்ளேன்; என்னைக் கைவிடின், சிவனே, யான் வேறு செய்வகையில்லேன். எ.று.

     மாதவர் - பெரிய தவமுடையோர். ஞானநெறி மாதவத்தால் உளதாகிய இன்பம் நுகர்விக்கும் பெருவாழ்தலால், “வாழ்ந்த மாதவர்கள்” என்று பாராட்டி, அவர்களது தவவுள்ளத்தில் சிவஞானச் சீரொளி திகழ்தலின் “மாதவர் மனத் தொளிர் ஒளியே” என உரைக்கின்றார். அருள் வளம் உடைமை விளங்க “வள்ளலே” என்றும், ஏனை விடைகள் போலின்றித் திருமாலின் தோற்றமாய் மூத்து விளி வில்லாததாய் உள்ளமை புலப்பட “மழவிடையவனே” எனப் புகழ்கின்றார். பகையாகிய மலைகளை அறநெறியிற் பொருது பிளந்து தூய்மையை நிலை பெறுவித்த பெருமை நோக்கி, முருகனை, “போழ்ந்த வேற்படைகொள் புனிதன்” என்றும், அப்பெருமானை யீன்றும் பூரணத் துவம் திரியாத சிவம் என்றற்குப் “பூரணா” என்றும், பரம் பொருளாதலால், “ஒற்றியூர்ப் பொருளே” என்றும் பரவுகின்றார். நன்னினைவே யன்றித் தீ நினைவுகள் ஆயிரக் கணக்கில் தோன்றிச் சுழலும் நிலைக்களமாதலின் தன்னைக் குறிக்குமிடத்துச் “சூழ்ந்த வஞ்சகனேன்” என்றும், எனவே, என்பால் பிழை பெருகியிருத்தல் இயல்பாதலால், அவற்றை மனங்கொண்டருளேல் என வேண்டுவாராய், “பிழைதனைக் குறியேல்” என்றும், பிழையுண்மையால் துன்பக்கடலில் மூழ்கித் துயர்கின்றேன் என்பார் “துன்ப சாகரம்தனில் அழுந்தி வீழ்ந்தனன்” என்றும், பிழை மிகுதி கண்ட வெறுப்பால் என்னைக் கை விட்டால் யான் யாது செய்ய வல்லேன் என்றற்குக் “கைவிடிற் சிவனே வேறு நான் யாது செய்வேனே” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், வஞ்சக நினைவுகளால் பிழை மிக்குத் துன்பத்தில் அழுந்தி வருந்தும் மன நிலையை எடுத்தோதிப் பிழை பொறுக்க என விண்ணப்பித்தவாறு.

     (8)