701. துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல்
துய்யநின் அருட்கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும்
கனிதனை அளித்தகற் பகமே
இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க்
கின்அருள் தரும்ஒற்றி இறையே.
உரை: கரும்பின் சுவையையுடைய மொழியினை வழங்கும் வள்ளி தெய்வயானை என்ற இருமகளிரை மணக்கும் கனி போன்ற முருகனையீன்றளித்த கற்பகமே, இரும்பு போன்ற வலிய நெஞ்சினையுடைய ராயினும் என் போன்றோர்க்கு இனிய அருள் நல்கும் திருவொற்றியூர் இறையாகிய தியாகப் பெருமானே, துரும்பு போன்ற எனது பிழையை நின் திருவுள்ளத்தில் கொள்ளல் வேண்டா; தூய நினது அருளாகிய கடலிற் படிந்தாடுதற்கு விருப்பம் கொண்டேன்; என்னைக் கைவிடுவாயாயின், சிவபெருமானே, வேறே நான் யாது செய்வேன்? எ.று.
துரும்பினேன்-துரும்பு போன்ற புன்மையுடைய யான். செய்துள்ள பிழை பலவாயினும் அவற்றை மனம் கொண்டு வெறுப்புறாது பொறுத்தருள வேண்டும் என்பாராய், “துரும்பினேன் பிழையைத் திருவுளந் தடையேல்” என்று கூறுகின்றார். என் போன்றோர் செய்யும் பிழைகள் சென்றடையத்தக்க கீழ்மை யுடையதன்று நின் அருள் நிறைந்த தூய வுள்ளம் என்பார், “திருவுள்ளம்” எனச் சிறப்பிக்கின்றார். திருவருள் நிறையைப் பெற்று இன்புறுதலினும் பேறு வேறின்மையின் “துய்யநின் அருட்கடலாட விரும்பினேன்” என்று விளம்புகின்றார். தூய என்பது துய்ய என வந்தது. எல்லையின்றி மிக்குறுதல் தோன்ற “அருட்கடல்” என உரைக்கின்றார். அருள் வேண்டி வந்தாரைப் புறக்கணித்துக் கைவிடின் அவர்கள் வேறு பற்றுக் கோடின்றித் துன்புற்றுக் கெடுவ துண்மையாதலின், “ஐயோ கைவிடில் சிவனே நான் வேறு யாது செய்வேன்” என்று கையறவு படுகின்றார். கரும்பின் சாறு போல் இனிக்கும் சொல்லையுடையர் என்பது விளங்கக் “கரும்பினேர் மொழியார்” என்று கூறுகின்றார், “கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை” (புறம்ப) என்றும், “கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணம்” (ஐயா) என்றும் சான்றோர் உரைப்பது காண்க. இருவர்; தெய்வயானை, வள்ளி. முருகனைக் கற்பகக் கனியெனக் கருதினமையின், அவரை ஈன்றருளிய சிவனைக் “கற்பகமே” என்று குறிக்கின்றார். வன்னெஞ்சக் கொடியராயினும் அருள் நலம் உணர்ந்து வேண்டி யடைவரேல் இன்னருள் வழங்கும் ஏற்றம் பற்றி, “இரும்பினேர் நெஞ்சர்களினும்” என் போல்வார்க்கு இன்னருள் தரும் ஒற்றி இறையே” என்று பரவுகின்றார்.
இதன்கண், துரும்பினும் புல்லியனாகிய என் பிழையைப் பொறுத்து அருட் கடலாட வருள்க என விண்ணப்பித்தவாறு. (9)
|