14. அறிவரும் பெருமை

திருவொற்றியூர்

    அறிவு ஆண்மை அருள் முதலிய உயரிய நலங்களால் அளப்பரும் பெருமையுடையவன் இறைவன்; உயிர்கள், அனைத்திலும் குறை யுடையவாய் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவாய் உள்ளன. அதனால் உயிரறிவு இறைவனது பேரருட் பெருஞ்செயல்களின் பெருமையையோ, அவனது படைப்பாகிய உலகில் நிகழ்வனவற்றின் அருமை பெருமைகளையோ அறியும் ஆற்றலுடையனவல்ல. அறிதற்கரிய பெருமையை எண்ணி அலமரும் உள்ளத்துடன் வடலூர் வள்ளல் இப் பத்தினைப் பாடுகின்றார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

703.

     நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால்
          நலிகின்ற நலிவினை அறிந்தும்
     தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு
          தாழ்த்தனை என்கொலென் றறியேன்
     மாயினும் அல்லால் வாழினும் நினது
          மலரடி அன்றிஒன் றேத்தேன்
     காயினும் என்னைக் கனியினும் நின்னைக்
          கனவினும் விட்டிடேன் காணே.

உரை:

     நாயினும் கடைப்பட்ட யான் யாது செய்ய வல்லேன்; நோயால் வருந்துகின்ற என் வருத்தத்தை அறிந்து வைத்தும், பெற்ற தாயினும் இனியவனாகிய நீ இன்னமும் எனக்கு அருள் செய்தற்கு வரக் காலம் தாழ்க்கின்றாய்; காரணம் இன்னதென்று அறியேன்; இறப்பதாயினும் அல்லது வாழ்வதாயினும் நின்னுடைய மலர் போன்ற திருவடியன்றி வேறொன்றை வழிபடேன்; என்னை வெகுண்டு வெறுத்தாலும், அன்பு செய்து மனம் கனிந்தாலும், யான் உன்னைக் கனவிலும் நினைப்பது கைவிடேன் காண். எ.று.

     இறைவனது பெருமையையும் தன்னையும் நினைந்து தனது சிறுமை விளங்கக் கண்டு “நாயினும் கடையேன்” என்று இழித்துரைத்துத் தம்மை வருத்தும் பிணி வகையை எண்ணிச் சலிப்புற்று, “என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை யறிந்தும்” என்று நொந்து கூறுகின்றார். இறைவன் தன்மையை எண்ணுங்கால் அவனது அருள் நலம் இனிமையுறப் புலப்படக் கண்டு, இத்தகைய அருளுருவாகிய நீ ஏன் இன்னமும் எளியேன் முன் போந்தருளா திருக்கின்றனை என்று வினவுவாராய், “தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை” என்றும், தாயாகித் தலையளிக்கும் தன்மையனாகிய நீ என் நலிவு அறிந்தும் வாராமைக் கேது அறியேன் என்பாராய், “என்கொல் என்று அறியேன்” என்றும் இயம்புகின்றார். வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் பற்றுக்கோடாவது எனக்கு நின் திருவடியல்லது பிறிதில்லை; அதனைத் தவிரப் பிறிது எத் தெய்வத்தையும் ஏத்துவேனல்லேன் என்பார், “மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடியன்றி ஒன்று ஏத்தேன்” என்றும், நீ எளியனாகிய என்னை வெகுண்டு ஒதுக்கினும், மனங்கனிந்து என்னை யாதரித்தழைக்கினும், உன்னைக் கனவிலும் மறவேன் என்றற்கு காயினும் கனியினும் நின்னைக் கனவிலும் விட்டிடேன் என்றும் கூறுகின்றார். என்னைக் காயினும் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் என இயைக்க.

     இதன்கண், எளியனாகிய எனது நலிவு அறிந்தும் அருள் செய்தற்குத் தாழ்க்கும் இறைவன் அருட் பெருமை அறிய வாராமை தெரிவித்தவாறு.

     (1)