704.

     காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
          கடவுளார் இருவரும் தங்கள்
     மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
          வள்ளல்நின் உருஅறிந் திலரே
     கோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக்
          கொள்கைகொண் டறிகுவ தையா
     பூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும்
          புனிதநின் அருளலா தின்றே.

உரை:

     பெரும, நின்னைக் காண விரும்பித் திருமாலும் பிரமனுமாகிய தேவர் இருவரும், தங்களது மாண்புடைய உருவம் மாறி முறையே பன்றியும் அன்னமுமாகிய உயிர்களின் உருக்கொண்டு திருவடியும் திருமுடியும் காண முயன்றும், வள்ளலாகிய நினது உருவைக் காணா தொழிந்தனர்; கோணிய பதடிபோன்ற நெஞ்சு படைத்த கொடியனாகிய யான் எத்தகைய கொள்கையைக் கொண்டு நின்னை அறிய வல்லேன்; அம்பலத்தில் நின்றாடுகின்ற புனிதனே, நின்னுடைய திருவருளல்லது யான் மேற்கொள்ள வல்லது யாதாம், உரைத்தருள்க. எ.று.

     தங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரமனும் திருமாலும் சிவனுடைய திருமுடியும் திருவடியும் காணத் தலைப்பட்டு, அன்னப்பறவையும் பன்றியுமாய் உருமாறி முயன்ற செய்தியை, “காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள் மாண்பது மாறி வேறுரு வெடுத்தும்” என்றும், அச்செயற்கண் வெற்றி பெறாமையை “வள்ளல் நின் உருவறிந் திலரே” என்றும் கூறுகின்றார். படைப்புக் கடவுள் என்ற சிறப்புப்பற்றிப் பிரமனை, “மலர் வாழ் கடவுள்” என்றும், “காத்தற் கடவுளாதலால் மாலாகிய கடவுள்” என்றும் குறிக்கின்றார். கடவுளர் - சொற்பொருள் கருதாது பொதுப்படத் தேவர் என்பது பட நின்றது. கடவுள் என்ற சொற்குப் பன்மையில்லை. செத்துப் பிறக்கின்ற தெய்வங்கட்கும் அது சொல்லாகியபோது கடவுளர் எனப் பன்மை யுரைக்கும் சொல்லாயிற்று. திருமால் பன்றியாகவும் பிரமன் பறவையாகவும் உருமாறி வேறுரு எடுத்ததுபற்றி, “தங்கள் மாண்பது மாறி வேறுரு எடுத்தும்” எனக் கூறுகின்றார். இருவரும் தமது தெய்வ வுரு மாறியதனால், “கடவுளர் இருவரும் தங்கள் மாண்பது மாறி” என்கின்றார். வேறுரு எடுத்தும் திருவுருவை யறியாது தவறினமையின், “வேறுரு எடுத்தும் வள்ளல் நின் உருவறிந் திலரே” என்று உரைக்கின்றார். இப் பயனில் முயற்சியை மேற்கொள்ளுமுன் நின் திருவருளை வணங்கிப் பெற்றிருந்தால் திருவருள் நாட்டம், இருவர்க்கும் வேண்டிய திருமுடியும் திருவடியும் அறியக் காட்டியிருக்கும். வரையாது அருள் வழங்கும் வள்ளன்மையுடையவன் சிவன் என்றற்கு “வள்ளல்” எனக் குறிப்பாய் உணர்த்துகின்றார். கோண் - கோணல். நேரிய மணியாய்ப் பயன்பட விளையாது கோணிப் பயனில் பதராயினமை பற்றிக் “கோண்பதர்” எனச் சிறப்பிக்கின்றார். நெஞ்சு கோணிப் பதராயினமையின் அதனையுடைமை பற்றித் தன்னைக் “கொடியனேன்” என்று கூறுகின்றார். நெஞ்சு கோடிய தோடு உள்ளீடின்றிப் பதராயினமையால், நற்கொள்கை யொன்றும் உடையனாதற்கு வாய்ப்பிலேனாயினேன் என்பார், “எந்தக் கொள்கை கொண்டு அறிகுவது” என்று கேட்கின்றார். இறைவனை யறிதற்கு வேண்டுவது ஞானமாதலின், கொள்கை ஈண்டு ஞானத்தின் மேற்றாயிற்று. ஏனைப் பசுபாச ஞானங்கள் இறைவனைக் காட்டாமையால் திருவருள் ஞானமே வேண்டப்படுவதென்றற்கு, “பூண்பது பணியாய்” என்றெடுத்தோதி அதுவும் “நின் அருளலாதின்று” என்று உரைக்கின்றார். என்றது, மேற்கொள்ளற்குரியது நின் திருவருள் ஞானமல்லது வேறில்லை என்பதாம். ஞானசபைத் தலைவனென்பது உணர்த்தற்கு “பொதுவில் நின்றாடும் புனிதன்” என்று புகல்கின்றார். திருமாலைப் பசுஞானமாகவும், பிரமனைப் பாசஞானமாகவும் கொள்வது சைவநூற் கருத்து.

     இதன்கண், திருவருள் ஞானத்தாலன்றி பசுபாச ஞானங்களால் அறிவரும் சிவத்தினது பெருமை கூறியவாறு.

     (2)