705. இன்றுவந் தெனைநீ அடிமைகொள் ளாயேல்
எவ்வுல கத்தரும் தூற்ற
நன்றுநின் றன்மேல் பழிவரும் என்மேல்
பழியிலை நவின்றனன் ஐயா
அன்றுவந் தொருசேய்க் கருள்புரிந் தாண்ட
அண்ணலே ஒற்றியூர் அரசே
நின்றுசிற் சபைக்குள் நடம்செயும் கருணா
நிலயமே நின்மலச் சுடரே.
உரை: அந்நாளில் ஒரு குழந்தைக்குப் பால் தந்து ஆண்டருளிய அண்ணலே, திருவொற்றியூர்க்கண் உள்ள அருளரசே, சிற்சபைக்கண் நின்று ஞானம் நடம் புரியும் அருணிலையமே, நின்மலச் சுடரே, இன்று இவண் போந்து என்னை அடிமை கொள்ளாவிடில் எவ்வுலகத்து நன்மக்களும் கண்டு தூற்றத்தக்க பெரும்பழி நினக்கு உண்டாகும்; என்மேற் பழியிராது, ஐயனே, அதனை இப்போதே சொல்லி வைக்கின்றேன். எ.று.
அன்று, பதஞ்சலி, வியாக்கிர பாதர், உபமன்னியு முதலிய முனிவரர் போந்து தில்லையம்பலத்தில் வழிபட்டது புராண காலம். புராண காலமெனில், நூற்றாண்டு வகையில் கணக்கிடற் காகாத காலம் எனக் கோடல் வேண்டும். உபமன்னியு சிறு குழவியாய்ப் பால் வேண்டியழுத போது, கூத்தப்பிரான் பாற்கடலைக் கொடுத்தான் என்பது புராண காலச் செய்தி. “பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” என்று திருப்பல்லாண்டு கூறுவது காண்க. புராணச் செய்தியெனின் அளவைகட்கும் பொருந்துமாற்றுக்கும் ஏலாத தென்பது நினைவிற் கொள்ளற்பாலது. பால் அருளிய இச் செய்திதான், “அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்தாண்டது.” கி. பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர்க்கு ஞானப்பால் கொடுத்தாண்டதைக் கொள்ளினும் அமையும். சேய், சிறு குழவி. அண்ணல், பெருமை வாயந்த தலைவன். குழவியின் தகுதிப் பாடறிந்து பால் அளித்தது சிவனது அறிவரும் பெருமை என்க. சிற்சபை - ஞானசபை. சிற்றம்பலம் என்பதில் அம்பலம் சபையாகியதால் சிற்சபை என வந்தது. அருள், வடமொழியில் கருணை, கருணா எனப்படலால், சிவனை அருணிலையமென்பவர், கருணாநிலையமே என்கின்றார். நெய்ச்சுடர் நடுவண் கரியுண்மைபோல, மலமற்ற ஞானச்சுடர்க்கண் கறுப்பின்மை புலப்படுத்த, “நின்மலச்சுடரே” என்று மொழிகின்றார். இறைவனையும் தம்மையும் எண்ணுகின்ற வடலூர் வள்ளலாருக்கு இறைவன் தம்மை அயன்மை படக்கருதி விலகியிருப்பது போன்ற நினைவொன்று தோன்றி அவரை வருத்துகிறது. உடனே வந்து இன்னருள் வழங்கித் தன்னை அடிமைகொள்ள வேண்டுமென இறைவனை விழைகின்றார். தனது வேண்டுகோள் மறுக்கப்படின் ஆற்றாமை மேலிட்டுத் தன்னைக் கெடுக்கும்; காண்பார் இறைவனைப் பழிப்பர் என்று எண்ணுகின்றமையின், “இன்று வந்து எனைநீ அடிமை கொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற நன்று நின்றன்மேல் பழிவரும்” என்று இயம்புகின்றார். தனது வாழ்வுக்கு இடுக்கண் நெருங்கிவிட்டதாக அஞ்சுகின்றமை தோன்ற, “இன்று வந்து அடிமை கொள்ளாவிடின்” எனவும், காணும் உலகினர் பலரும் அடிமை கொள்ளா வன்கண்மை கண்டு சிவனை இகழ்வர் என்பாராய், எவ்வுலகத்தரும் தூற்ற” எனவும், பழியும் நினக்கேயாம் என்றற்கு, “நின்றன்மேல் பழிவரும்” எனவும் இசைக்கின்றார். இறைவன் அடிமை கொள்ளா தொழிந்தமைக்கும், உலகு பழி தூற்றினமைக்கும் நான் காரணமாதல் கண்டு எனக்கும் பழிவரும் என நினைப்பாயேல், பழியெனக் கெய்தாது; நினக்கே யாம் என்பாராய், “என்மேற் பழியிலை நவின்றனன் ஐயா” என்று கூறுகின்றார்.
இதன்கண், இறைவன் விரைந்து போந்து அடிமை கொள்ளாமை அறிய மாட்டாது வள்ளலார் பழிமலைவு பேசி அறிவருமை வெளிப்படுத்தவாறு. (3)
|