706.

     சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம்
          தொடக்கினில் பட்டுழன் றோயா
     இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான்
          எந்தநாள் அந்தநாள் உரையாய்
     படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப்
          பரிந்துண்ட கருணைஅம் பரமே
     குடர்கொளும் சூலப் படைஉடை யவனே
          கோதையோர் கூறுடை யவனே.

உரை:

     சாதலை நினைந்து வருந்தும் தேவர்கள் சாவா வமுதுண்ணும்பொருட்டுக் கடலிற் பிறந்த நஞ்சினை விரும்பியுண்ட அருளுருவாகிய பரம்பொருளே, பகைவர் குடரை யறுக்கும் சூலப்படையைக் கையிலும், கோதை யணிந்த உமாதேவியை ஒரு கூற்றிலுமுடைய சிவனே, ஒளி திகழும் மணிகள் இழைத்த மாலையணிந்த முலையை யுடைய இளமகளிரின் பாசவலையிற் பட்டு வருந்திக் குன்றாத துன்பம் நுகரும் என்னை நீ ஆட்கொள்ளும் நாள் யாதோ? அதனை உரைந்தருள்வாய். எ.று.

     அசுரர் பகைச் செயலால் நேரும் சாதற் றுன்பம் பொறாது வருந்திய தேவர்கள் சாவா மருந்து வேண்டிக் கடல் கடைந்தமையின், சாவாமை நினைந்தமை குறித்து வானவர்களைப் “படர்கொளும் வானோர்” என்றும், சாவாமை நல்கும் மருந்தை உண்ணும்பொருட்டுச் சிவன் நஞ்சுண்ட அருட்செயலை வியந்து, “அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணையம் பரமே” என்றும் இயம்புகின்றார். நஞ்சென்று வெறாது வானோர் உய்தியே விழைந்துண்டமை பற்றிப் “பரிந்துண்ட” என்று பாராட்டுகின்றார். சூலப்படையால் தாக்கியவழிப் பகைவர் வயிற்றுக் குடர் சரிந்து வெளிப்படுவதால் அதனைக் “குடர் கொளும் சூலப்படை” என்று கூறுகின்றார். கோதையை அணிந்திருத்தலின் உமையைக் கோதை என்கின்றார். பெண்ணுக்கே கோதை யென்றும் ஒரு பெயர் கூறுவர். “பூப்புனை மாலையும் மாலைபுனை மாதரும் தோற்புனை வின்னாண் தொடர் கைக்கட்டியும், கோச்சேரன் பெயரும் கோதை யென்றாகும்” (திவா. 11) என்பது காண்க. மார்பிலணியும் ஒளிமிக்க மணிமாலை முலைமேல் கிடந்து மிளிர்தலின் “சுடர்கொளும் மணிப்பூண் மடவியர்” என்று இளமகளிரைக் குறிக்கின்றார். மடம் - ஈண்டு இளமை மேற்று. மகளிர் பால் உண்டாகும் ஆசையால் தோன்றிப் பிணிக்கும் தொடர்பு “மடவியர் தம் தொடக்கு” என்று காட்டப்படுகிறது. தொடக்கு - வலையுமாம். மகளிரொடு தொடக்குண்டோர் வருத்தம் மிகுவதோடு, பலவகையில் ஓய்விலா இடர்ப்பட்டு இன்னலுறுவது கண்டுரைத்தலின், “தொடக்கினிற் பட்டுழன்று ஓயா இடர்கொளும்” என உரைக்கின்றார். இவ்விடர்ச் சூழலினின்றும் உய்திபெறும் நாளை இறைவன் ஆட்கொளும் நாள் என்று கருதுதலின், அதன்பால் எழுந்த ஆர்வமிகுதி தோன்ற “ஆட்கொள்ளும் நாள்தான் எந்த நாள் அந்த நாள் உரையாய்” என்று கேட்கின்றார்.

     இதன்கண், மகளிர் ஆசைத் தொடக்கிற் பட்டு அலமரும் தமக்கு ஆட்கொள்ளும் காலம் தெரியாமை எடுத்துரைத்தவாறு. அஃது இறைவன் திருவுள்ளத் தெல்லைக்கண் உள்ளதென்பது நினைவு கூரற்பாற்று.

     (4)