707. உடைமைவைத் தெனக்கின் றருள்செயா விடினும்
ஒப்பிலாய் நின்னடிக் கெனையே
அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங்
களித்திட வேண்டும்இன் றெவைக்கும்
கடைமையேன் வேறோர் தேவரை அறியேன்
கடவுள்நின் திருவடி அறிக
படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே
என்உளம் பார்த்துநின் றாயே.
உரை: பகையைப் படுக்கும் படையேந்தும் கையையுடைய பசுபதியே, என் மனநிலையைக் கண்டும் செயலின்றி யிருக்கின்றாயே, வேறொரு தேவரை நினைந்தறியேன்; கடவுளாகிய நின் திருவடிகள் இதனை நன்கு அறிக; உடைமைப் பொருள்களை என்பால் தந்து எனக்கு நீ அருளாயாயினும், ஒப்பற்றவனாகிய நின் திருவடிக்கு என்னை அடகு வைத்தேனும் நினது திருவருளாகிய நன்பொருளை இங்கு எளியேனுக்கு அருளுதல் வேண்டும்; இவ்வுலகில் எல்லாப் பொருளிலும் நான் கடையவனாவேன். எ.று.
படைமை என்பதில் மை பகுதிப்பொருள் விகுதியாய் நின்றது. படை - மூவிலை வேல்; மழு முதலிய படைக்கருவி. பகைவரைத் தாக்கிப் படுத்தலின் இவை படையெனப்பட்டன. பசுபதி - பசுவாகிய உயிர்கட்குத் தலைவன். மலங்களாற் பிணிப்புண்டலின் உயிர்களைப் பசு வென்றல் மரபாயிற்று. பசுவென்னும் வடசொல் கட்டப்படுவது என்னும் பொருளது. எனக்கும் உலகியல் வாழ்வுக்கும் பொருள்கட்கும்உள்ள தொடர்பும், தேவைப்படுமாறும், அறிந்தும் அறியார்போல அயர்ந்திருப்பது நினக்கு ஆகாது என்பாராய், “என்னுளம் பார்த்து நின்றாயே” என்று விளம்புகிறார். மறந்தும் புறந்தொழா மனமுடையேன் என்பார், “வேறோர் தேவரை யறியேன்” என்று கூறுகின்றார். பிற தேவரை வழிபட்டும் பெறுக என்ற கருத்தை மறுத்து இதனை நின் திருவுள்ளத்திற் கொண்டருள்க என்பாராய், “கடவுள் நின் திருவடியறிக” என மொழிகின்றார். பொன்னும் பொருளுமானவற்றை ‘உடைமை’ என்று கொண்டு, அவற்றுள் வேண்டுவனவற்றைத் திருஞானசம்பந்தர் முதலிய பெருந்தொண்டராயினார்க்கு முன்னாளில் தந்தருளியதுபோல எனக்கு அருளுகின்றாயில்லை என்பது புலப்பட, “உடைமை வைத்து எனக்கின்று அருள் செயாவிடினும்” என்றும், பொருள் வேண்டின் அதற்கு ஈடு தருதல் இன்றியமையாதாயின் என்னையே கொள்க என்றற்கு, “நின்னடிக்கு எனையே அடைமை வைத்தேனும் அருட்பொருள் அளித்திட வேண்டும்” என்றும் வேண்டுகின்றார். அடகு என இந்நாளில் வழங்குவது அடைமை என வந்துளது; உண்மை வடிவம் அடைவு; அஃது அடைகு எனத் திரிந்து அடகு என மருவி மொழிந்தது. நின் அருளைப் பொருள் வடிவில் தருக என்ற கருத்துப்பட “அருட் பொருள்” என்றார் எனினுமாம். இப்போது எனக்கு எவ்வகைப் பொருளும் வேண்டப்படுகிறது என்பது தோன்ற, “இன்று எவைக்கும் கடைமையேன்” எனக் கூறுகின்றார். ஒப்பிலாத பெருமானாகிய உனக்கு ஒத்தன தருமாறு இல்லேன் என்பாராய், ”ஒப்பிலாய்” என்ற சொல்லால் தம் கருத்தைக் குறிக்கின்றார்.
இதன்கண், இறைவன் திருவருட் குறிப்பு விளங்காமையின் பலபடப் பேசி அருள் வழங்க வேண்டுவது புலப்படுத்தவாறு. (5)
|