708.

     பார்த்துநிற் கின்றாய் யாவையும் எளியேன்
          பரதவித் துறுகணால் நெஞ்சம்
     வேர்த்துநிற் கின்றேன் கண்டிலை கொல்லோ
          விடம்உண்ட கண்டன்நீ அன்றோ
     ஆர்த்துநிற் கின்றார் ஐம்புல வேடர்
          அவர்க்கிலக் காவனோ தமியேன்
     ஓர்த்துநிற் கின்றார் பரவுநல் ஒற்றி
          யூரில்வாழ் என்உற வினனே.

உரை:

     மெய்ப்பொருளை யுணர்ந் தொழுகுவோர் வழிபட்டேத்தும் திருவொற்றியூரில் வாழ்ந்தருளும் என் உறவே, ஐம்புலன்களாகிய வேடர்கள் சூழ்ந்து ஆரவாரிக்கின்றார்கள்; அவர்கள் சூழ்ச்சியில் வீழ்ந்து கெடுவனோ? தமியனாகிய யான் அறியேன்; நீயோ உலகியல் யாவையும் கண்ணாரப் பார்த்தவண்ணம் இருக்கின்றாய்; எளிய யான் அவற்றால் உளவாகும் துன்பத்தால் உள்ளம் புழுங்குகின்றேன்; நீ பார்த்திலையோ? நீ விடமுண்ட கண்டத்தை யுடைய பெருமானாதலின், உன்னை அவற்றால் வருத்த முடியாது; காண். எ.று.

     ஓர்த்துணர்வார் - பொருளின் மெய்ம்மைத் தன்மையை உள்ளவாறு உணரும் மெய்ஞ் ஞானிகள் ஒற்றியூர்ப் பெருமானது பெருந் தன்மையை உள்ளவாறறிந்து வழிபடுகின்றா ரென்பது விளங்க, “ஓர்த்து நிற்கின்றார் பரவும் நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே” என்கின்றார். உயிர் வாழ்தற்கு இன்றியமையாத உடல் கருவி யுலகு நுகர்வு ஆகிய சிறப்பாய்க் கூறுவன அனைத்தையும் உதவித் தொடர்பு கொண்டமையின், “உறவினன்” என்று இறைவனை உரைக்கின்றார். அம்மை, அப்பன், மாமன், மாமி எனப் பல்வகையுறவில் வைத்துப் பேசுவதும் இந்த உறவுண்மை கண்டேயாகும். கண், காது முதலிய பொறியிடத்தியங்கும் ஒளி, ஓசை முதலிய புலன்கள்மேற் செல்லுகின்ற ஆசையைந்தும் “ஐம்புல வேடர்” என்று உருவகம் செய்யப்படுகின்றன. “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” (சிவ.ஞா.போ.) என மெய்கண்ட சிவனார் ஓதுவது காண்க. உனது திருவருள் துணையின்றித் தமியனாகிய வழி, யான் ஐம்புல வேடர்பால் அகப்பட்டுக் கெட்டயர்வேன் என்ற கருத்துத் தோன்ற, “ஐம்புல வேடர் ஆர்த்து நிற்கின்றார். தமியேன் அவர்க்கிலக் காவனோ” என்று இசைக்கின்றார். ஐம்புலன்கள் மேல் உளவாகும் ஆசைக் கூட்டமும் அதன் எழுச்சியும் புலவேடரின் ஆரவாரமாகக் காட்டப்படுகின்றன. வேடரது ஆரவாரத்தையும் அவர் சூழலில் தமியேன் எய்தும் துன்பத்தையும் நீ அருட்கண்களால் பார்த்தவண்ணம் இருக்கின்றாய் என்பாராய், “பார்த்து நிற்கின்றாய் யாவையும்” என்றும், யான் மனத்திடை வெம்பி அயர்கின்றேன் என்பாராய், “எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் வேர்த்து நிற்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். வேர்த்தல் - “உள்வேர்ப்பர்” (குறள்) என்பது போலின்றி வெம்பி யயர்தல் மேற்று. நீ விடமுண்ட கண்டனாதலின், பார்த்து நிற்கின்ற உன்னை ஒன்றும் செய்யமாட்டா; எளியேனைப் பற்றித் துன்பச் சேற்றில் அழுத்திவிடும் என்ற குறிப்பில், “விடமுண்ட கண்டன் நீ” என்றும், “நீ கண்டிலை கொல்லோ” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், ஐம்புல வேடர் ஆர்த்து நிற்றலின், உனது அருள்நலம் அறியும் திறமிலனாயினேன் என்று உணர்த்தியவாறு.

     (6)