71. சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள்
சொல்லு மெல்லாம்
வல்லாயென றேத்த வறிந்தேன்
இனி யென்றன் வல்வினைகள்
எல்லாம் விடை கொண்டிரியும் என்மேல்
இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசலச்
சீரரசே.
உரை: தணிகை மலையில் இருந்தருளும் சீர் பொருந்திய அருளரசாகிய முருகப்பெருமானே, ஐயனே, சொற்களாகிய மலர் கொண்டு மாலை தொடுத்தணியும் அன்பை அகத்திற் கொண்ட நல்லோர்க்குச் சான்றோர் அருள் கூர்ந்து சொல்வனயரவும் நீ எல்லாம் வல்லவன் என்று ஏத்துவது தெரிந்து கொண்டேன்; இனி என்னைச் சூழ்ந்துள்ள வல்வினைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விடும்; என் மேல் இயமன் கொண்டிருக்கும் கோபமும் வலி யிலதாகும், எ. று.
சொல்லார் மலர் - சொல் மாலைகள்; ஆகு பெயர். முருகன்பால் அன்பு கொண்ட நன்மக்கட்குச் சான்றோர் அருள் கூர்ந்து உரைப்பன யாவும் எல்லாம் வல்லவன் முருகப் பெருமான் என்று ஏத்துவது என்பார். “அன்பகத் தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம் வல்லாய் என்று ஏத்த” என்றும், அதனைத் தாம் அறிந்து கொண்டமையை, “அறிந்தேன்” என்றும் கூறுகின்றார். இனி நானும் அவ்வண்ணம் ஏத்துவேனாதலின், என்னை விடாது சூழ்ந்திருக்கும் வினை பலவும் கெடுவது ஒருதலை என்பார், “இனி என்றன் வல்வினைகள் எல்லாம் விடை கொண்டிரியும்” என்று உரைக்கின்றார். விடை கொண்டிரியும் என்பது நீங்கு மென்னும் பொருளது. முருகன்பால் அன்பனாதலாற் பற்றலாகாமை கண்டு இயமன் என்மேற் சின முற்றிருக்கிறான்; அது செல்லாவிடத்துச் சினமாய்க் கெடும் என்பார், “என் மேல் இயமன் சினமும் செல்லாது காண்” என்று செம்மாப் புறுகின்றார்.
இதனால், முருகப் பெருமானை எல்லாம் வல்லாய் என்று ஏத்தின் வல்வினையும் இயம பயமும் இல்லையாம் என்று தெரிவித்தவாறாம். (71)
|