710. கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும்
கடையனேன் நின்திரு வடிக்கு
விரைபடா மலர்போல் இருந்துழல் கின்றேன்
வெற்றனேன் என்செய விரைகேன்
திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே
திருவொற்றி யூர்வளர் தேனே
உரைபடாப் பொன்னே புரைபடா மணியே
உண்ணுதற் கினியநல் அமுதே.
உரை: அலைகள் இல்லாத அருட் செல்வமாகிய கடலே, திருவொற்றியூரில் எழுந்தருளும் தேன் போன்ற பெருமானே, மாற்றுக் காணப்படாத பொன் போன்றவனே, குற்றமில்லாத மணியே, உள்ளத்தால் உண்டற்கு இன்பமளிக்கும் நல்ல அமுதமாக வுள்ளவனே, எல்லையில்லாத வஞ்சம் நிறைந்த பிறவிக்கடலிற் கிடந்து வருந்தும் கீழ் மகனாகிய யான் உன் திருவடிக்கு மணமில்லாத பூப்போல மண்ணில் இருந்து வருந்துகின்றேன்; பயனில்லாத யான் என்ன செய்தற்கு நாளைக் கழிக்கின்றேனோ? எ.று.
மாறித் தொடர்ந்த வண்ணம் இருத்தலால் பிறவியைக் “கரைபடாப்பவம்” என்றும், கடல் போற் கரையின்றி விரிந்து தோன்றலின், “பவக்கடல்” என்றும், வருவது தெரியாமல் மறைந்திருப்பது பற்றி “வஞ்சப்பவம்” என்றும் வனைந்து கூறுகின்றார். பிறவி தோறும் முன்னையதும் வரக்கடவ பின்னையதும் மறைந்து நிற்பது “பவத்தின் வஞ்சனை” யென அறிக. பிறவிச் சூழற்குள் இருந்து பேசுதலின் ”பவக்கடல் உழக்கும் கடையனேன்” என்கின்றார். துன்ப நுகர்ச்சியே மிக்கிருத்தலைக் கண்டு, தம்மைக் “கடையனேன்” என்று கூறுகின்றார். மணமில்லாத மலர்கள் இறைவன் திருவடிக்கு ஆகாதென விலக்குண்பது பற்றி “விரைபடா மலர் போல் இருந்துழல்கின்றேன்” எனல் பொருத்தமாயிற்று. சிவஞானமில்லேன் எனத் தம்மை இழித்தற்கு விரைபடா மலரை எடுத்துரைத்தார் என்றலும் ஒன்று. வெற்றன் - வெறுமையுடையன்; வெறுமை - பயனின்மை. ஒவ்வொரு கணமும் மிகுதல் குறைதலின்றி ஒரே யளவாய் நில்லாது பெயர்ந்த வண்ணமிருத்தலால் ‘என்செய விரைகேன்’ என்று விளம்புகின்றார். விரைதல் - விரைந்து கழிதல் மேற்று. திருவருளாகிய கடலை அலைப்பதொன்றின்மையால் “திரைபடாக் கருணைச் செல்வ வாரிதி” என உரைக்கின்றார். பொன்னின் மாற்றுக் காண்பவர் அதனைக் கல்மேல் உரைத்துப் பார்ப்பது குறித்து, “உரைபடாப் பொன்னே” என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தில் “மாற்றறியாத செழும் பசும் பொன்னே” (சற்குரு) என்பது காண்க. மணிகட்குப் பலவேறு குற்றம் கூறுபவாதலின், சிவனை, “புரைபடா மணியே” எனப் புகழ்கின்றார். புரை - குற்றம். “உண்ணுதற்கினிய அமுதே” என்பதில், உண்ணுதல் சிந்தையிற் கோடல். உண்ணற்கு இனிய அமுதே என்றவர், நல்லமுதே என்றது, உண்டற்கினியது உடற்கு மாறுபடுவது கண்டு, இந்த அமுது அன்னதன்று என யாப்புறுத்தற்கு.
இதன்கண், கணமும் தாழ்த்தலின்றி விரைந்து காலம் கழித்தலின் அருமை புலப்படாமை வெளிப்படுத்தவாறு. (8)
|