711. நல்அமு தனையார் நின்தரு வடிக்கே
நண்புவைத் துருகுகின் றனரால்
புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன்
புண்ணியம் என்பதொன் றறியேன்
சொல்அமு தனைய தோகைஓர் பாகம்
துன்னிய தோன்றலே கனியாக்
கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ
கடையனேன் கழறுவ தென்னே.
உரை: சொல்லில் அமுது போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட தலைவனே, கனிதலில்லாத கல்லையும் கனிந்து அமுதாகச் செய்யும் கடமை உனக்குண்டு; கீழ் மகனாகிய யான் கூறற்கு என்ன இருக்கிறது? நல்ல தேவரமுது போன்ற பண்புடையவர்கள் நின் திருவடிக்கண் அன்பு வைத்து மனம் உருகுகின்றார்கள்; புல்லமுது போன்ற யான் என்ன செயதற்காக உலகிற் பிறந்தேனோ? புண்ணியம் என்பதைச் சிறிதும் அறியேன். எ.று.
அமுதம் போன்ற இனிய சொல் வழங்குவது பற்றி உமை யம்மையைச் “சொல்ல முதனைய தோகை” என்றும், அவரைத் தமது உடலில் இடப்பாகத்தில் நீக்கமற இணைத்துக் கொண்டமை தோன்ற, “ஓர் பாகம் துன்னிய தோன்றலே” என்றும் கூறுகின்றார். நீக்கமற இணைத்துக் கொண்டமையால் “துன்னிய” என்று சொல்லுகின்றார். கல்லைக் கனியாக்கிப் பிசைந்தளிக்கும் செயலருமை சிவனுக்கே யுண்டு; மணிவாசகர், “கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக்கினாய்” (சதகம்) என்று உரைப்பது காண்க. அது பற்றியே, “கனியாக் கல்லமுதாக்கும் கடன் உனக்கன்றோ” என எடுத்துரைக்கின்றார். உயர்ந்தோர்க்கு உரிய கடனைத் தாழ்ந்தோர் எடுத்துக் காட்டுவது அழகன்று என்பது பற்றிக் “கடையனேன் கழறுவதென்னே” என்று கூறுகின்றார். கழறுவது, ஈண்டு நேர்கின்ற உரையாடுதல் மேற்று. மெய்ம்மை சான்ற அன்பர்களை “நல்லமுதனையார்” என்றும், அவர்கள் சிவன்பால் அன்புற்று நெஞ்சும் உருகுகின்றமை தெரிந்து, “நண்பு வைத்துருகுகின்றனரால்” என்றும் இயம்புகின்றார். வேறு ஆராய்தலின்றிக் கண்டாங்கே உண்ணப்படுவது நல்லமுது; அது போல் மெய்ம்மையும் தூய்மையும் பற்றி நல்லன்பர் ஏற்கப்படுகின்றனர் எனத் தெளிக. புல்லமுது - புல்லரிசி கொண்டு சமைக்கப்படும் கஞ்சி; இதனைப் பண்டைய சான்றோர் புற்கையென்று வழங்கினர்; “உப்பின்று புற்கை யுண்கமா” எனச் சான்றோர் வழக்கில் வருவது காண்க. பிறந்த பிறப்பில் இறைவன் பெருமையையோ, அதனையுள்ளவாறறியும் அறிவையோ பெற்றிலேன் என்றற்கு, “என் செய்வான் பிறந்தேன்” என்று வினவுகின்றார். புண்ணியம் - நல்வினை. புண்ணியமே வடிவாயவன் சிவன் என்றும், அவனைப் பூசிப்பது சிவபுண்ணியம் என்றும், அதனை அறிந்து பயன்பெறும் திறமில்லேன் என்பாராய்.“புண்ணியம் என்ப தொன்றறியேன்” என்றும் கூறுகின்றார். அருணந்தி சிவனார், “புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே, நண்ணிய ஞானத்தினால் இரண்டினையு மறுத்து ஞாலமொடு கீழ்மேலும் நண்ணானாகி எண்ணும் இகலோகத்தே முத்தி பெறும்” (சிவ.சித்.8:31) என்பது காண்க.
இதன்கண், பிறவிப் பயன் இறைவனது அறிவரும் பெருமை அறிவது என்று உணர்த்தியவாறு. (9)
|