712. என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை
என்னும்நன் னீரினால் ஆட்டி
அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட
அண்ணலே நண்ணரும் பொருளே
உன்னருந் தெய்வ நாயக மணியே
ஒற்றியூர் மேவும்என் உறவே
நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு
நன்குகைம் மாறுநா யேனே.
உரை: எளியனாகிய என்னை நின்னையுடையவனாக் கொண்டு நினது அருளாகிய நீரினால் நீராட்டி அன்னையும் அப்பனுமாய் மிக்க அன்பு செய்து ஆட்கொண்ட அண்ணலாகிய பெருமானே, நெருங்குதற்கரிய பரம்பொருளே, நினைத்தற்கரிய தெய்வ நாயகமான மணியே, திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளிய என் உறவே, எனக்கு என்றும் நன்மையையே செய்கின்றாய்; இதற்கு நான் நல்ல கைம்மாறு யாது செய்வேன், அறிகிலேன். எ.று.
நின்னவன் - நின்னைத் தனக்கு உடையவனாகக் கொண்டவன். நி்னக்கு இங்ஙனம் உரியவனாகிய என்னை அருள் புரிந்து அன்பாகிய நன்னீரில் என்னை மூழ்குவித்து மகிழ்வித்தாய் என்பாராய், “நின்னவனாக் கொண்டு நின் கருணையென்னும் நன்னீரினால் ஆட்டி” என்று இசைக்கின்றார். கருணையை நீர் என்னும் வழக்குப்பற்றி, தன்னைக் கருணை நிறைந்தவனாகச் சேர்த்தமை புலப்பட, “கருணையென்னும் நன்னீரில் ஆட்டி” என்றும், கருணையினும் நன்பொருள் பிறிதின்மை தோன்ற, “நன்னீர்” என்றும் கூறுகின்றார். மக்கள்பால் அன்பு செய்வதில் தாயும் தந்தையும் நிகரற்றவராதலின் அவ்வுயர்வு விளங்க “அன்னை அப்பனுமாய்ப் பரிவு கொண்டு” எனக் கூறுகின்றார். உம்மை, அன்னையைத் தழீஇ நின்றது. உள்ளத்தே நிறைந்திருக்கும் அன்பு செயற்படுமிடத்துப் பரிவாய்ப் புலப்படுமாறு பற்றி, “பரிவு கொண்டு” எனவும், பெருமைக்கு எல்லையாயவனாதலின் “அண்ணலே” எனவும் குறிக்கின்றார். யாரும் எட்டியும் சுட்டியும் அறியலாகாத பரம்பொருள் என்றற்கு “நண்ணரும் பொருளே” எனவும் நவில்கின்றார். சிந்தைக் கெட்டாத சேணில் திகழும் செம்பொருளாதல் விளங்க “உன்னரும்நாயகமணியே” என்றும், தெய்வமாவன யாவற்றாலும் கண்டறியப்படாத மேன்மைத் தாதலால் “தெய்வநாயக மணியே” என்றும் இயம்புகின்றார். எவ்வுயிர்க்கும் இன்பமல்லது பிறிது யாதும் செய்யாத சீர்மை நினைந்து, “நன்னர் செய்கின்றார்” என்று புகன்று, பரம் பொருள் செய்யும் நலங்கட்குக் கைம்மாறு யாதும் யாவராலும் செய்ய முடியாதென்பது உலகறிந்த வுண்மையாதலால் “என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேன்” என்று உரைக்கின்றார்.
இப் பத்தின்கண் வரும் பாட்டுப் பத்தும் அந்தாதித் தொடை ெ்காண்டு தொகுக்கப்பட்டிருப்பது அறிக. இறைவன் அருட் செயலின் நலத்தின் அருமை சிறுமையால் அறியப் படாமை உள்ளுறுத் துரைத்தவாறு. (10)
|