15. அருள் விடை வேட்கை

திருவொற்றியூர்

    இதன்கண் பாட்டுத் தோறும் பரமசிவனுடைய அருட் செயல்களைக் குறிப்பிட்டுரைத்து, அவற்றிற்குரிய காரண காரியப் பயன்களை வள்ளற் பெருமான் எண்ணி யருளுகின்றார். இவற்றின் நேரிய கருத்தும் பொருளும் உணர்த்தினல்லது குறையற வுணரலாகாமை கண்டு, அவனது அருளுள்ளத் திருக்குறிப்பை வினாவாய்ப் பாட்டால் கேட்டருளுகின்றார். கேள்வி, விடை வேண்டும் நாட்ட முடையது போறலின், “அருள் விடை வேட்கை” என்று பெயர் தரப்பட்டுள்ளது.

கலி விருத்தம்

713.

     போகம் கொண்ட புணர்முலை மாதொரு
     பாகம் கொண்ட படம்பக்க நாதரே
     மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
     மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.

உரை:

     போக நுகர்ச்சிக்குரிய இரண்டாகிய முலைகளையுடைய உமை நங்கையை ஒரு பாகத்திலேயுடைய படம்பக்க நாதரே, வானளாவிய வளவிய பொழில்கள் நிறைந்த திருவொற்றியூரின்பால் மிக்க ஆர்வமுடைய எமக்கு முன்னே தோன்றி நின்று அருள் புரிவீரோ, கூறுமின். எ.று.

     உமாதேவியின் மார்பகங்களைப் புகழ்ந்து பரவும் ஞானசம்பந்தர் “போகமார்த்த பூண் முலையாள்” என்றலின், வள்ளலாரும் “போகங் கொண்ட புணர்முலை மாது” எனப் போற்றி யுரைக்கின்றார். உடலின் இடது கூற்றை உமைக்கு நல்கினமை பற்றி “ஒரு பாகம் கொண்ட படம் பக்க நாதரே” என்று ஏத்துகின்றார். படம்பக்க நாதர்க்குக் கற்கோயிலொன்று ஆதி புரீசர் கோயிற்குள்ளேயே கி. பி. பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வீரராசேந்திர சோழனது ஐந்தாம் ஆண்டில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட் (232/1912) டொன்று கூறுகிறது. இப் படம்பக்கநாதர் திருமுன்பு வாகிசுர பண்டிதர் ஆளுடைய நம்பி புராணம் ஓதினாரென்று இராசாதிராச சோழன் காலத்துக் கல்வெட் டொன்று (371/1911) கூறுகிறது. வாசுகியை தனக்குட் சேர்த்துக் கொண்டதனால், ஒற்றியூர் இறைவன் படம்பக்க நாதன் எனப்பட்டான்என்று புராணம் கூறுகிறது. ஒற்றி நகர்க்கண் உறைதற்கு விருப்பம் மிக்குற்றமை பற்றி “ஒற்றியில் மோகம் கொண்ட எம் முன்” என இயம்புகின்றார்.

     இதன்கண், ஒற்றியூர்க்கண் எம்முன் போந்து அருள் நல்குவீரோ, கூறுமின் என்று வேண்டுகின்றார்.

     (1)