714. தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
பவள மேனிப் படம்பக்க நாதரே
கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
இவளை ஒற்றிவட் டெங்ஙனம் சென்றிரோ.
உரை: வெள்ளிய தீருநீற்றை மெய்யில் சந்தனமாக அணிந்து கொள்ளும் வினோத மூர்த்தியே, பவளம் போன்ற மேனியையுடைய படம் பக்க நாதரே, கவளம் கவளமாக உணவுண்டு சிறக்கும் யானையின் தோலைப் போர்த்த நீர், இம் மங்கையை ஒற்றி நகர்க்கண் இருக்கவிட்டெங்கே சென்றீர் சொல்லுமின். எ.று.
தவளம் - வெண்மை. திருநீற்றைச் சந்தனம் போல மேனி முற்றும் பூசிக் கொள்வது பற்றி, “தவளநீற்று மெய்ச் சாந்த வினோதரே” என்கின்றார். வினோதன் - வியத்தகு காட்சியன். மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனாதல் கண்டு இங்ஙனம் உரைக்கின்றாருமாம். புறத்திணைத் துறையில் பாடாண் வகையில் பாடற்கமைந்த பண்பமைந்த ஆண் மகனைப் பல்வகையிற் சிறப்பித்துப் பாடும் புலவர், அவனை மங்கை யொருத்தி காமக் காதற்றொடர்பு கொண்டு ஒழுகுவதாகக் கற்பனை செய்து பாடுவர். அவ்வகையில் ஒற்றியூர் இறைவனைக் காதலித் தொழுகும் நங்கையை அவன் அவளை ஊரில் இருத்திவிட்டுத் தான் மாத்திரம் எங்கோ பிரிந்து சென்றதாகவும், அவள் பொருட்டுத் தோழி சென்று காரணம் வினவுவதாகவும் இப்பாட்டு அமைந்துளது. “நீற்று மெய்ச் சாந்த வினோதரே, படம்பக்க நாதரே, கரியுரி போர்த்த நீர் இவளை இந்நகர்க்கண் தனிப்ப விட்டு எங்ஙனம் சென்றீர்” என்று வினவுகின்றாள். சிவந்த மேனியனாதலின், “பவள மேனிப் படம்பக்க நாதரே” என்று கூறுகின்றாள். யானைக்குக் கவளம் கவளமாக உணவு தருபவாதலின், “கவள வீற்றுக் கரி” என்று உரைக்கின்றார். கவள வுணவால் யானை மேனி சிறப்புறும் என அறிக. அரிசியும் வெல்லமும் கலந்த உருண்டை வடிவில் திரட்டியது கவளம். வீறு - தனி்ச் சிறப்பு. இவ் யானை, வையக வாழ்நர்க்குக் கொடுமை செய்து போந்த கயாசுரனாகிய யானை; “குருதி கக்கியே ஓலிட வவுணர் தம்குலத்துக் கரியுரித்தனன்” (ததீசி.யுத்.146) என்று கந்த புராணம் கூறுவது காண்க. கயாசுரனாகிய யானையின் தோலை யுரித்துப் போர்த்துக் கொண்டது பற்றிக், “கரியுரி போர்த்த நீர்” என மொழிகின்றார். கரியுரி - யானையின் தோல். ஒற்றி நகர்க்கண் தனித்திருப்ப விட்டுச் செல்வது, நன்றன்றே; எங்கே எவ்வாறு சென்றீர் என வினவுவாராய், “இவளை ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றீர்” என்று கேட்கின்றார். தனிப்ப விட்டுச் சேறற்கு எவ்வாறு மனம் கொண்டீர் என்றும், எவ்விடத்துக்குச் சென்றீர் என்றும், இளம் பெண்ணை ஒற்றிவைத்துச் செல்பவர் உலகில் உண்டோ என்றும் வினவியதாகப் பல் பொருள் தோன்ற நினைப்பது காண்க.
இது பாடாண்டிணையில் கடவுள்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கம். (2)
|