715. சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
பால மேவும் படம்பக்க நாதரே
ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
உரை: ஒழுக்கமொடு பொருந்தி விளங்கும் நெருப்புக் கண் ணொன்றை நெற்றியிலுடைய படம்பக்க நாதரே, உலகத்தவர்க்குண் டான துன்பத்தைப் போக்குதற் பொருட்டு, முன்காலத்தே “ஐயராகிய நீவிர் கடல்விடத்தை யுண்டவ ரல்லரோ?” சொல்லுமின். எ.று.
உலகருள் முதல்வனும் ஞானப் பெருந் தலைவனுமாய் உலகுயிர் கட்குப் பொய்தீர் ஒழுக்கநெறி நல்கும் உரவோனாதலின், சிவனைச் “சீல மேவித் திகழ்பவன்” என்றும், நெருப்புமிழும் கண்ணை நெற்றியிலுடைய னென்றற்கு, “அனற் கண் ஒன்று பால மேவும் படம்பக்க நாதரே” என்றும் உரைக்கின்றார். பாலம் - நெற்றி. உலகிற்கு ஒளியும் வெப்பமும் தருவனவாகிய ஞாயிறும் திங்களும் நெருப்புமாகிய மூன்றும் பரமசிவத்துக்குக் கண்ணாம் என்று குறித்தற்கு இதனை உரைத்துக் காட்டுகின்றார். உலகத்து மேலோராகிய தேவரும் அசுரரும் எய்திய மரணநோயைப் போக்குதற்குக் கடல் கடைவான் முயன்றமை புலப்பட, “ஞாலமேவும் நவையை யகற்ற” என்றும், கடல் கடைந்த வழி அமுதப் பேற்றுக்கு இடையூறாகத் தோன்றிய ஆலவிடத்தை யுண்ட செய்தியை விதந்து, “முன் ஆலமுண்டவர் அல்லிரோ” என்றும் உரைக்கின்றார். பிறர் எய்தும் துன்பம் போக்கற்கு நஞ்சுண்ட நீவிர், தனித்திருந்து வருந்தும் இவள் நோய் தீர்க்க நினையா திருப்பது நன்றன்று எனப் பாடாண்டிணைக் கூற்றுக்குக் குறிப்புப் பொருள் உறுத்தவாறு.
இதுவும் பாடாண்டிணை மகளிர் கூற்று. (3)
|