716.

     உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
     படைகொள் சூலப் படம்பக்க நாதரே
     கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
     இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.

உரை:

     உடையாய்க் கொள்ளப்பட்ட கோவணத்துடன் இங்குப் போந்த அழகரே, படையாகச் சூலத்தைக் கொண்ட படம்பக்க நாதரே, கடையான பொருளெனப்பட்ட நஞ்சினையுண்டு கறுத்த கழுத்தையுடைய நீர், இடையே ஒற்றியூரை விட்டு எவ்விடம் சென்றீர் கொல்லோ, கூறுக. எ.று.

     கோவணம் அரைக்கு உடையாக அழகு செய்தல் பற்றி, “உடை கொள் கோவணத் துற்ற அழகரே” என்றும், சிவனுக்குரிய சிறப்பான படை சூலமாதலின் “படைகொள் சூலப் படம்பக்க நாதரே” என்றும் உரைக்கின்றார். சிறந்த பொருளாகக் கருதப்படாமையின் நஞ்சினை “கடைகொள் நஞ்சு” எனவும் அதனை யுண்டொழி யாமல் கழுத்திடை நிறுத்தி நிறமும் கறுத்து உலகுக்குத் தெரிவித்தலின் “நஞ்சுண்டு கண்டம் கறுத்த நீர்” எனவும் கூறுகின்றார். காதலுற்ற இவள் கூடற்குள் இடையில் இவ்வொற்றியூர்க்கண் விட்டேகுதல் எளிதில் இயலாததொன்று; நீவிர் எவ்வாறு சென்றீர் என்பாள், “இடையில் ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றீர்” என்று கேட்கின்றாள்.

     பாடாண்டிணைக்கண் தோழி தலைவர்க் குரைத்தது.

     (4)