717.

     நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
     பறைய நின்றப டம்பக்க நாதரே
     உறைய மாணிக் குயிர்அளித் திட்டநீர்
     குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.

உரை:

     அருட் செல்வம் நிறையுமாறு அந் நெறிக்கண் வாழ்கின்ற சிவத்தொண்டர்கள் நெடிது வாழவும், வன்மை சான்ற பிறவித் தொடக்குக் கெடவும், நின்றருளிய படம்பக்க நாதரே, நிலத்தே பல்லாண்டு வாழ்தற் பொருட்டு மாணியாகிய மார்க்கண்டனுக்கு உயிர் தந்தருளிய நீர், வளத்திற் குறையே யில்லாத திருவொற்றியூரிலுள்ள கோயிற் கண்ணே விரும்பி யுறைகின்றீர் போலும். எ.று.

     தொண்டர்கள் நீடு வாழ்வது திருவருட் செல்வத்தை நிறையப் பெறுதற் பொருட்டாதலின், “நிறைய நீடுற வாழ் தொண்டர்” என்று கூறுகின்றார். மண்ணுலகின் நீங்கிய வழி ஏனை யுலகங்கள் வினை செய்தற் கேற்ற கன்ம பூமிகள் அன்மையின், “நிறைய நீடுற வாழ் தொண்டர்” என்று சிறப்பித்துரைக்கின்றார். நிறைவது அருள் எனவும், நீடுவது வாழ் வெனவும் அறிக. மார்க்கண்டன் எமனுடைய பிடிப்பினின்று காக்கப்பட்டது மாணிப்பருவத்திலாதலின், அவனை மாணி என்றே கூறுகின்றார். மாணி - மணமாகா இளைஞன். மாணிக்கு உயிர் அளித்தது, சாவின்றி நெடிது மண்மேல் உறைதற் கென்பார் “உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர்” எனக் குறிக்கின்றார். வள வகையில் எதனாலும் குறையின்மை தோன்ற, “குறையிலா ஒற்றி” என்றும், அதனால் கோயிற்கண் இருப்பையே நினைந்து இவளை மறந்துவிட்டீர்போலும் எனத் தோழி கூற்றில் வைத்து, “ஒற்றிக் கோயிற்கண் உள்ளீரோ” என்றும் இயம்புகின்றார்.

     இது பாடாண்டிணைக் கூற்றின்கண் தலைவி பொருட்டுத் தோழி கூறுவது.

     (5)