718. வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
உரை: அழகிய வண்ணம் படைத்த நாகப் பாம்பின் மணிதங்கிய தலைகள் ஐந்து அமைந்த படம் விளங்கும் செல்வராகிய படம்பக்க நாதரே, தேவர்கள் திரண்டு பின்னிற்க முன்னின்ற காம தேவனை எரித்துப் பின்னர் உயிர் தந்தருளிய நீர், வணங்குகின்ற எம்போலியர்க்கு வாய் திறந்தொரு சொல்லும் சொல்லாமல் இருப்பது என்னை? எ.று.
வணம் - பல்வகை வண்ணம். ஐந்தலை நாகத்தின் படம் பன்னிறம் கொண்டு அழகுறுவது பற்றி, “வணங்கொள் நாகம்” என்று உரைக்கின்றார். நாகப் பாம்பின் தலையில் மாணிக்கமுண்டு என்பவாகலின் “மணித்தலை யைந்து” என்று இசைக்கின்றார. படம் - பாம்பின் படம். படம் விரிந்த ஐந்து தலை நாகத்தை மணி திகழ் மேனியில் அணிந்து கொள்வது பற்றி, “பணங்கொள் செல்வப் படம் பக்க நாதரே” என்று பரிந்துரைக்கின்றார். சிவன் மேற்கொண்ட யோகத்தைக் கெடுக்குமாறு காமன் சென்றபோது தேவர்கள் கூட்டமாய்ப் பின் சென்று கண்ட வரலாறு விளங்கக் “கணங்கொள் காமனை” என்றும், காமன் எரிந்து நீறானமை கண்டு புலம்பிய அவன் மனைவி பொருட்டு அவற்கு உயிர் கொடுத்தருளிய அருட்பெருமை விளங்க, “காமனைக் காய்ந்து உயிர் ஈந்த நீர்” என்று வேண்டுகின்றாள், பாடாண்டிணைத் தோழி. காய்ந்து போந்த காமனைக் கண் திறந்து அருளிய நீவிர் வேண்டிப் போந்து விரும்பி வணங்கும் இளமகளிராகிய எமக்கு வாய் திறந்து ஒன்றும் கூறாமை நன்றன்று என்றற்கு “வணங்குவார்க்கு என்கொல் வாய் திறவாததே” என்று விளம்புகின்றார்.
இதுவும் பாடாண்டிணைத் தோழி கூற்று. (6)
|