719.

     நாட நல்இசை நல்கிய மூவர்தம்
     பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
     வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
     ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.

உரை:

     நல்ல இசை மேலும் இன்பம் நாடுமாறு பாடல் நல்கிய மூவர்களின் பாடல்களைக் கேட்டு மகிழும் படம்பக்க நாதரே, வாடுதல்வேண்டா என்று உபமன்யு என்ற மாணிக்கு பால் அளித்தருளிய நீவிர், எனக்கு அருள் செய்தளித்தற்கு எங்கே சென்று ஒளித்துக் கொண்டீர். எ.று.

     இன்பம் கெடா வகை அமையும் இசை “நல்லிசை” என்க. நல்லிசை எனக் கூறப்படுவதும் இன்பத்தால் மேன்மை யுறற்கு ஏற்ற இலக்கியமாவதும் ஆகிய பாட்டினை நல்கியவர் ஞானசம்பந்தர் முதலிய மூவருமாதலின், “நல்லிசை நாட நல்கிய மூவர்” என்று இயம்புகின்றார். நல்குதற் பொருளாயது பாட்டு. பாட்டென்பது பண்நின்று இன்பம் செய்தற்கு நிலைக்களம். பாடலோடு இயையாதவழிப் பண் பயனின்றாம் என்பர் திருவள்ளுவர். இந்நாளில் கருவி யிசையே பயின்றவர் சிலர் பாட்டுக்களை விரும்பா மடவராக வுள்ளனர். மூவர் பாடல், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவர்; இவர் பாடியுள்ள பண் சுமந்த பாடல்கள் இங்கே மூவர் பாடல்கள் எனப்படுகின்றன. காரைக் காலம்மையின் பாடல்களிற் சிலவும் திருவிசைப் பாக்கள் சிலவும் பண்ணமைந்தவை யாயினும், மூவர் பாடல்களே நாட்டில் பெரிதும் பயில்கின்றன. பசியால் வாடிய உபமன்யு என்பானுக்குப் பாற் கடலையே வாட்டம் தீர நல்கினமையின், “வாடல் என்றொரு மாணிக்கு அளித்த நீர்” எனக் கூறுகின்றார். மாணி - வேதியச் சிறுவன். வாடல் - வாடற்க. ஈடில் என்பது இடுதலின் என்னும் பொருளது; இடு, ஈடு என முதனிலை நீண்டது. எனக்கு வேண்டுவனவற்றை விரும்பி யிடுதற்கு இங்கில்லாமல் எங்கோ சென்று விட்டீர் என்பாராய், “எங்கொளித் திட்டிரோ” என உரைக்கின்றார்.

     இது பாடாண்டிணைத் தலைவி கூற்று.

     (7)