720. சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
பலவு மாகும்ப டம்பக்க நாதரே
நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
உரை: சுழன்றோடும் காற்றும் நெருப்பும், பரந்த மண்ணும் விண்ணும் நீரும் ஆகிய பலவுமாகின்ற படம்பக்க நாதரே, நிலவு பொழியும் தண்ணிய மதியை நீண்ட சடைமுடியில் வைத்துள்ள நீர் அன்பு செய்யும் எனது குறையைத் தவிர்க்க மாட்டீரோ, கூறுக. எ.று.
சுலவுதல் - சுழலுதல். சுழன்றவண்ணமிருப்பது பற்றிச் “சுலவு காற்று” என்று குறிக்கின்றார். தூவிய மண் - தூய மண் என வந்தது. மேவிய என்பது மேய எனவும், தாவிய வென்பது தாய எனவும் வருதல் போல. தூவியது போல எங்கும் பரந்து கிடத்தலால் “தூயமண்” என்று இயம்புகின்றார். ஐம்பூதங்களும் பிறவுமாயிருத்தல் பற்றி “பலவுமாகும் படம் பக்க நாதரே” என்று பகர்கின்றார். திங்கள் பொழியும் தண்ணிய ஒளி நிலவு எனப்படும்; அதனால் “நிலவு தண்மதி” என்று இசைக்கின்றார். அன்புள்ளத்தால் இறைஞ்சுதல் தோன்ற “குலவும் என்றன்” என்றும், வேட்கை வெம்மையால் குறை மிக்கு மெலிதலால் “குறை தவிர்க்கீர் கொலோ” என்றும் பாடாண்டிணைப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பேசுகின்றார். (8)
|